மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோளில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் மண விழாவில் பங்கேற்பதற்காக வைகோ சனிக்கிழமை (மே 25) திருநெல்வேலி வந்தார். கலிங்கப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்த போது அன்றிரவு, எதிர்பாரா விதமாக கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வைகோ வந்தார்.
தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவுக்கு, சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பின் வைகோ 2 அல்லது 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் பலரும் வைகோ விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக உடல் நலம் பெற்று அரசியல் பணியைத் தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“