/indian-express-tamil/media/media_files/2025/04/01/LHAx349kj0MBkYWsgJOE.jpg)
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நேரமில்லா நேரத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று உரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. ஏழை மக்கள், விவசாயிகள், சிறு தொழில் பிரிவுகளில் உள்ள சிறு வணிகர்கள் தங்கள் உடனடித் தேவைகளுக்கு நகைக் கடன்களை பெரிதும் நம்பியுள்ளனர்.
அடகு கடைகளிலோ அல்லது கமிஷன் முகவரிடமோ நகையை அடமானம் வைத்தால், அவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறைந்த வட்டியில் கிடைப்பதாலும், பாதுகாப்புக் காரணமாகவும் இவர்கள் வங்கிகளில் இருந்து நகைக் கடன்களைப் பெறுகிறார்கள். இருப்பினும், நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளின் படி, நகைக் கடன் காலத்தின் முடிவில், கடன் வாங்குபவர் வட்டியை மட்டுமே செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக் கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளைப் பெற்ற பின்பு, மறுநாள்தான் மீண்டும் மறு அடமானம் வைத்துதான் கடன் பெறமுடியும். இதன் காரணமாக, ஏழை மக்கள், விவசாயிகள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அது அவர்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வட்டி மட்டும் செலுத்தி நகைக் கடனை புதுப்பிக்கும் முறை ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உதாரணமாக, ரூ.2 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்தி நகைக்கடனைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் வழிகாட்டு முறைகளால் விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் தனியார், தனிநபர்கள், அடகு தரகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களிடமிருந்து கடன் வாங்கும் சூழ்நிலையை உருவாக்குவதோடு அவர்களுடைய வாழ்வாதாரத்தை சுரண்டுவதற்கும் வழி வகுத்துவிடும்.
ரிசர்வ் வங்கி மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் சூழலை உருவாக்க விரும்புகிறது என்பதையும் அதன் காரணமாக இந்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இது “குழந்தையை குளியல் நீரோடு வீசுவது” போன்றதாகும். அதாவது தேவையில்லாத ஒன்றை நீக்குவதாக நினைத்து பயனுள்ள ஒன்றையும் அகற்றிவிடுகிறோம்.
எனவே, நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகள் பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.