வைகோ 40 வருடங்களாக புலிகள் பெயரைச் சொல்வதால் அவருக்கும் காசு வந்ததா? என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி பதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வைகோ-சீமான் மோதம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினரை எதிர்கொண்ட வைகோ கடுமையாக சீறினார்.
சீமான் உலக நாடுகளில் விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பதாகவும், பிரபாகரனுடன் வேட்டைக்கு சென்று ஆமைக்கறி சாப்பிட்டதாக கோயபல்ஸ் மாதிரி பொய் சொல்வதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை வைகோ முன் வைத்தார்.
சீமான் மீது வைகோ கடும் பாய்ச்சல் : முழு விவரம் ‘க்ளிக்’ செய்யவும்.
வைகோ புகார்கள் குறித்து சீமான் நேரடியாக எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளில் ஒருவரான பாக்கியராஜன் சேதுராமலிங்கம் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பது இது..
‘பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செய்வதற்காகத் தென் மண்டல செயலாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் பெருங்காமநல்லூர் நினைவிடத்திற்குச் சென்றனர். அங்குப் போட்டிருந்த மேடையில் வைகோ உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அதைப் பார்த்த நாம் தமிழர் கட்சியினர் அவர் பேச்சை முடித்த பின் உறுதிமொழி எடுத்து வீரவணக்க முழக்கமிடலாம் என்று காத்திருந்தனர்.
நாம் தமிழர் கட்சியினரை பார்த்த வைகோ பெருங்காமநல்லூர் தியாகிகளைப் பற்றிப் பேசுவதை விடுத்துச் சம்பந்தமேயில்லாமல் அங்கே சீமான் அண்ணனை பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார். தன் சாதியை சொல்லி தமிழரில்லை என்று நாம் தமிழர் கட்சியினர் மீம்ஸ் போடுவதாகவும், தான் எதற்கும் துணிந்தவன் என்றும், பிரபாகரனை 5 நிமிடம் பார்த்துவிட்டு புலிகளின் பெயரை சொல்லி உலகெங்கும் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் என்றும் மிகவும் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார்.
அப்படியும் நாம் தமிழர் தம்பிகள் அங்கிருக்கும் சூழல் கருதி பொறுமை காத்து நின்றனர். பேசி முடித்துக் கீழிறங்கிய வைகோ அவ்விடத்தை விட்டு வெளியேறும் பொழுது நாம் தமிழர் கட்சியினர் உள்ளே வீரவணக்க முழக்கம் போட்டு நுழைந்திருக்கிறார்கள். ஏற்கனவே கடுப்பில் இருந்த வைகோ அவர்களைக் கடக்கும் பொழுதும் பொது நிகழ்ச்சி என்று பாராமல் மேடையில் பேசியதை அங்கேயும் கண்டபடி ஒருமையில் பேசி மிரட்டுவது போல் கையைக் காட்டி அவர்களை நோக்கி முன்னேறியிருக்கிறார். அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இவ்வளவு நடந்த பொழுதும் கடைசி வரை நாம் தமிழர் கட்சியினர் வீரவணக்க முழக்கம் மட்டும் தான் போட்டிருக்கிறார்கள். பிறகு நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து உறுதிமொழி எடுத்து அமைதியாகத் திரும்பிவிட்டனர். இது தான் உண்மையில் நடந்தது. நான் கூறுவது பொய்யெனத் தோன்றினால் அங்கே எல்லா ஊடகமும் இதைப் பதிவு செய்திருக்கிறது. அவர்களிடம் கேட்டு பெற்றுப் பார்த்துக்கொள்ளலாம்.
நாம் தமிழர் கட்சியினர் ஏதேனும் அங்கே தவறிழைத்திருந்தால் அதன் பிறகு அங்கே அவர்களை அந்த நிகழ்வை நடத்தும் ஊர் கமிட்டியினர் மலர்வணக்கம் செய்ய அனுமதித்திருக்க மாட்டார்கள். என்றைக்குமே ஒரு பொது நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர் அந்த நிகழ்ச்சிக்குப் பங்கம் வரும்படி செய்யமாட்டார்கள். பெருங்காமநல்லூரிலும் அப்படிச் செய்யவில்லை. வைகோ நிகழ்ச்சிக்குச் சம்பந்தமில்லாமல் சீமான் அண்ணனை பற்றிப் பேசிய பிறகும் நாம் தமிழர் கட்சியினர் நாகரீகமாகத்தான் நடந்துகொண்டனர்.
நான் நாம் தமிழர் கட்சியின் இணையதளப் பாசறையின் செயலாளர். நான் உறுதியிட்டுக் கூறுகிறேன் இதுவரை நாம் தமிழர் கட்சி பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் ஐயா வைகோ அவர்களின் சாதியை குறிப்பிட்டு மீம்ஸ் போட்டதில்லை. கேலி செய்ததில்லை. இணையதளத்தில் யாரோ ஏதோ எழுதியதற்குப் பொது நிகழ்ச்சியில் வைகோ அவர்கள் நாம் தமிழர் கட்சியைப் பற்றிக் கீழ்த்தரமாகப் பேசி நடந்துகொண்டது மிகுந்த மனவருத்தத்தைத் தருகிறது.
அதை விடப் புலிகள் பெயரை சொல்லி உலகமெங்கும் காசு வாங்குகிறார்கள் என்பது தான் மிகுந்த மனவலியை தருகிறது. இதைத் தான் பாஜககாரன் சொல்றான், இதைத் தான் காங்கிரஸ்காரன் சொல்றான். வைகோவும் சொல்கிறார். புலிகள் பெயரை சொன்னால் காசு வருகிறதென்றால் வைகோவும் தான் கடந்த 40 வருடமாகச் சொல்கிறார். ஆக அவருக்கும் காசுவந்தது என்று அர்த்தமாகாதா?. மற்றவர்கள் பேசலாம், இதை வைகோ பேசலாமா?.
சமீபகாலமாக வைகோ அவர்களின் செயல்பாடுகளில் அதீதத்தன்மையைக் காண்கிறேன். தன்னுடைய அரசியல் தோல்வியை நோக்கி செல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவர் இப்படி நடந்துகொள்கிறார் என்று என்னால் புரிந்துகொள்ளமுடிவதனால் அவர் மேல் பரிதாபம் தான் வருகிறது. திமுகக் கூட்டணியில் கனமான இடம் கிடைக்கச் சீமானை எதிர்க்கலாம் என்று எண்ணி இப்படிச் செய்கிறாரோ அல்லது தற்பொழுது நடக்கும் மக்கள் போராட்டங்களைத் திசை திருப்ப இப்படி நடந்து கொள்கிறாரோ என்ற சந்தேகங்கள் எழுகிறது. ஏதுவாக இருந்தாலும் ஐயா வைகோ அவர்கள் எங்கள் மேல் இத்தனை தூரம் வன்மமும் கோவமும் கொண்டிருக்கத் தேவையில்லை என்பது மட்டுமே அவரிடத்தில் நான் சொல்ல விரும்புகிறேன்.
அண்ணனிடம் கேட்டேன்.. என்ன அண்ணா வைகோ இப்படிச் சொல்கிறாரே என்று.. ‘தம்பி, தமிழ்நாடே போராட்டக்களமாக மாறி நிற்கிறது. நமது இனத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக இருக்கிறது. இதை எல்லாம் எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. நிலைமை இப்படி இருக்க இதிலெல்லாம் கருத்து சொல்ல என்ன இருக்கிறது. விடு, அவர் பெரியவர் ஏதோ நம்மிதிருக்கும் கோவத்தில் அப்படிப் பேசுகிறார். அவருக்கு மட்டுமல்ல காலம் எல்லோருக்கும் புரியவைக்கும்.
தம்பிகளிடம் சொல், இணையத்தில் அவரின் கருத்துக்கு எந்த எதிர்ப்பதிவும் யாரும் போடக்கூடாதென்றும். தொடர்ச்சியாக எல்லா ஊர்களிலும் போராட்டத்தை முன்னெடுப்பதில் கவனத்தைக் கொண்டிருக்கவேண்டுமென்றும் அண்ணன் சொன்னதாக சொல். நமக்கு நிறைய வேலை இருக்கு. ஆகவே கண்டிப்பாக அண்ணன் இதைச் சொன்னேன் என்று சொல்’ என்றார்.
அண்ணன் சொல்வதைத் தட்டாமல் செய்வது தான் நம்மை அவர் எவ்வளவு சரியாக வழிநடத்துகிறார் என்று உலகிற்கு இந்த நேரத்தில் காட்ட இருக்கும் ஒரே வழி .. தயவு செய்து ஐயா வைகோ அவர்களின் கருத்திற்கு எதிர்பதிவு போடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சரியானது வென்றே தீரும் என்ற நியதி இவ்வுலகில் இருக்கிறதென்றால் நம்மைப் பற்றி அவதூறு கூறுபவர்களே நம்மை ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்வார்கள். அதுவரை களத்தில் நிற்போம்.’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.