உலகப் புகழ்பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பகல் பத்து, இராப்பத்து என கொண்டாடப்படும் இத்திருவிழாவில் இன்று பகல் பத்தின் பத்தாம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் புறப்பாடாகி சேவை சாதித்து வருகிறார்.
நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு தினம் வைகுண்ட வாசலை திறக்க இருக்கிறார். இந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது தமிழகத்தின் பல்வேறு மாவாட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் ஸ்ரீரங்கம் வந்து செல்வர்.
இதன் காரணமாக இன்றும், நாளையும் ஸ்ரீரங்கத்தில் கூட்டம் அலைமோதும்.
இதனை முன்னிட்டு இன்றும் நாளையும் தற்காலிகமாக இரண்டு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஶ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் தற்காலிகமாக நின்று செல்லும்.
ஜனவரி9,10-ம் தேதிகளில் எழும்பூர் - கன்னியாகுமரி (12633), கன்னியாகுமரி - எழும்பூர் (12634) மற்றும் எழும்பூர் - கொல்லம் (16101), கொல்லம் - எழும்பூர் (16102) ஆகிய விரைவு ரயில்கள் ஶ்ரீரங்கத்தில் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்னதாக, வைகுண்ட ஏகாதேசி திருவிழா முடியும் வரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை ஸ்ரீரங்கத்தில் தற்காலிகமாக நின்று செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“