காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடந்து வரும் போராட்டத்தில் திரையுலகினர் திரளானோர் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக, பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட சில திரைப்பட இயக்குனர்கள் இணைந்து தமிழர் பண்பாட்டு கலை இலக்கிய பேரவையை தொடங்கியுள்ளனர். இந்த பேரவையின் மூலம், அவர்கள் தங்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவும் இந்த பேரவை மூலம் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்.
நேற்றுமுன்தினம் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்திலும் வைரமுத்து கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "இந்த போராட்டம் கிரிக்கெட் விளையாட்டுக்கு எதிரானதல்ல. போலீஸாருக்கு எதிரான போராட்டமும் அல்ல. காவிரி நதி உரிமைக்கான போராட்டம். தமிழ் மண்ணுக்கான போராட்டம். நாங்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்துள்ளோம். தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது" என்றார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று ராணுவ கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த போது அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. இதனால், அவர் சாலை மார்க்கமாக அல்லாமல், ஹெலிகாப்டர் வழியாக பயணித்தார். அவர் சென்ற அனைத்து இடங்களிலும் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கறுப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும். காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி" என்று பதிவிட்டுள்ளார்.