வைரமுத்து எழுதிய ‘ஆண்டாள்’ கட்டுரைக்கு தடை கேட்டு வழக்கு!

வைரமுத்து எழுதிய, ‘ஆண்டாள்’ கட்டுரையைத் தடை செய்யக் கோரி மனுவை வேறு அமர்விற்கு மாற்றி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

வைரமுத்து எழுதிய, ‘ஆண்டாள்’ கட்டுரையைத் தடை செய்யக் கோரி மனுவை வேறு அமர்விற்கு மாற்றி தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

கவிஞர் வைரமுத்து, ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ராஜபாளையத்தில் வாசித்து அளித்த கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மொய்தீன் இப்ராகிம், ஜி.பிரபு, பெயின்ட்டிங் ஒப்பந்ததாரர் விக்டர், தமிழ் இலக்கியவாதியும் மென்பொருள் பொறியாளருமான கே.வி.எஸ். கண்ணன் ஆகியோர் கூட்டாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.

அதில், ஒற்றுமையையே அனைத்து மதங்களும் போதிப்பதாகக் கூறி, பகவத் கீதை, குரான் மற்றும் பைபிளில் இருந்து வரிகளும் மனுவில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. ஆனால், கோடிக்கணக்கான மக்கள் வழிபடும் பெண் தெய்வமான ஆண்டாளை வேண்டுமென்றே, அவதூறான வகையில் புனிதத்தன்மையை கெடுக்கும் நோக்கில் வைரமுத்து கட்டுரை வெளியிட்டிருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல் நிலையத்தில் கண்ணன் சார்பில் புகார் அளிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சர்ச்சைக்குரிய கட்டுரை இணைய தளம் மற்றும் செய்தித்தாள் வடிவில் எளிதாகக் கிடைப்பதாகவும் அதைத் தடை செய்ய தமிழக உள்துறைத் செயலருக்கு உத்தரவிட வேண்டும்.

வைரமுத்துவின் கட்டுரை அவதூறானது என்ற நிலையில், அதற்கு எதிர்கருத்து கூறிய ஹெச். ராஜா மாற்று மதக் கடவுள் குறித்து அவதூறு கூறியதுடன், ஆண்டாள் குறித்த வைரமுத்து கட்டுரையை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதாக கூறி எச்.ராஜா, முகமது நபி குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். எனவே ஆண்டாள் குறித்த கட்டுரைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மையிலை சத்தியா, ஆண்டாள் கட்டுரை குறித்து கருத்து தெரிவிப்பதாக தொடர்ந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாகவும். நீதிமன்றங்கள் குறித்தும் தவறான தகவல்களை பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதாகவும், எனவே இதற்கு ஆண்டாள் குறித்த கட்டுரைக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தாமல் இருக்க வேண்டும். நீதிமன்றங்கள் குறித்து தவறான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட அதனை தவிர்த்து கடந்து செல்வதே சிறந்தது. இதனை தமிழ் நன்றாக தெரிந்த நீதிபதிகள் விசாரித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தனர்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டனர்.

 

×Close
×Close