வைரமுத்து மன்னிப்பு கேட்டே ஆகணும்: உண்ணாவிரதம் தொடங்கிய ஜீயர்

வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்

கவிஞர் வைரமுத்து நேரில் வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக ஹிந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பாஜகவும் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. எச்.ராஜா, கடுமையான வார்த்தைகளால் வைரமுத்துவை வசைபாடியிருந்தார்.

இந்த விவகாரம் பெரிதாக, வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். ஹெச்.ராஜாவும் வைரமுத்துவை இழிவாகப் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பிரச்னை ஓயாமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதேசமயம் வைகோ, ஸ்டாலின், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, ‘ஆண்டாள் சன்னதியில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். முக்கிய பிரமுகர்கள் ஜீயருடன் பேச்சு நடத்தியதையடுத்து ஜீயர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மேலும் வைரமுத்து வரும் பிப்.,3 ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் தராத காரணத்தால், அதனை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் சடகோப ராமானுஜர் மீண்டும் இன்று உண்ணாவிரதத்தை துவக்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ஜீயர், வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close