/indian-express-tamil/media/media_files/2025/01/15/ekwJPSOuqEBe6iwh3nxx.jpg)
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இரண்டாவது நாள், மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இன்று புதன்கிழமை திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பேசிய வைரமுத்து, ”கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடுவதால் திருவள்ளுவருக்கு பொன்னாண்டு. அந்த வெள்ளி விழாவை உலகம் முழுதும் கொண்டாடும் வகையில் கொண்டாடிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்றொரு சிறப்பும் திருவள்ளுவருக்கு கிடைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 70 நாடுகள் கூடியிருந்த பேரவையில் திருவள்ளுவர் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, உலகம் முழுவதும் திருக்குறள் பரப்பப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு, எங்களுடைய வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்த தனி மதமும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறளை உலகப் பொதுமறை என்று ஏற்றுக்கொண்டு பிரதமர் அறிவிக்க வேண்டும். ஜனவரி 2 திருக்குறள் உரை எழுத தொடங்கிவிட்டேன். உள்ளுக்குள் நுழைந்த பொருளுக்குள் புகுந்து அறிவுக்குள் விரிந்து எழுதுகிறேன். காணாத திருக்குறள், கேளாத திருக்குறள், வாசிக்காத திருக்குறளை இளைஞர்கள் மத்தியில் இந்த உரை சேர்க்கும் என நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இன்று நான் சைவம், அசைவ கேள்வி என் உடம்புக்கு ஆகாது” என பதிலளித்தார் வைரமுத்து.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.