'என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் உண்மை என்றால், என் மீது வழக்கு போடுங்கள். சந்திக்க காத்திருக்கிறேன்' என பாடகி சின்மயின் பாலியல் புகார் குறித்து கவிஞர் வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
மீ டூ எனும் ஹேஷ்டேக் மூலம் கவிஞர் வைரமுத்து மீது இரு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சின்மயியும் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த வைரமுத்து, "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு உடனே, 'வைரமுத்து ஒரு பொய்யர்' என்று சின்மயி பதில் அளித்து இருந்தார்.
இந்நிலையில், வைரமுத்து இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், 'என் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் உண்மை என்றால், என் மீது வழக்கு போடுங்கள். சந்திக்க காத்திருக்கிறேன்' என்று பதிலளித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. குற்றம் உண்மையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். வழக்கை சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களுடனும், அறிவுலகத்தின் ஆன்றோர்களுடனும் கடந்த ஒருவார காலமாக ஆழ்ந்து ஆலோசித்து அசைக்க முடியாத ஆதாரத்தை தொகுத்து திரட்டி வைத்துள்ளேன். நீங்கள் வழக்கு போடுங்கள். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலை வணங்குகிறேன்" என்று வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால், இதற்கு பதிலளித்துள்ள சின்மயி, 'வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். நான் தயார். அவர் இதற்கு தயாரா?' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளளார்.
வைரமுத்துவின் வீடியோவிற்கு சின்மயி விடுத்துள்ள சவால் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.