Vaithilingam ensures ADMK general council meeting won’t happen at July 11: வருகின்ற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டும் நடைபெறும் என இ.பி.எஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் பொதுக்குழு நடைபெறாது என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
கடந்த ஜுன் 23 ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், ஒற்றைத் தலைமை விவகாரத்தால் தீர்மானங்கள் எதுமின்றி சலசலப்புடன் நிறைவடைந்தது. பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக இ.பி.எஸ் வரவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன் காரணமாக 23 தீர்மானங்களும் தோல்வி அடைவதாக கே.பி.முனுசாமி அறிவித்தார். பின்னர் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் பொதுக்குழு கூட்டம் மீண்டும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என இ.பி.எஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஜெ. மரண வழக்கு; ஆறுமுகசாமி ஆணையம் ஆகஸ்ட் 3ல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு
இந்தநிலையில், ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நிச்சயம் நடைபெறாது என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அவர்களின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. அன்றைக்கு பொதுக்குழுவிற்கு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டச்செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் செல்வதற்கு முன்னரே, பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாத 600 பேரை மேடைக்கு முன் உட்கார வைத்துள்ளனர். அவர்கள் தான் கூச்சல் குழப்பத்திற்கு காரணம். பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள் ஜனநாயகத்திற்கு புறம்பாக, கட்சியின் கண்ணியம் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டார்கள், நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டார்கள், எனவே அதை எதிர்ப்பதாக கூறி வெளிநடப்பு செய்தோம்.
இ.பி.எஸ் பக்கம் இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தற்போது ஓ.பி.எஸ் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். மதுரை மட்டுமல்லாது தமிழகம் ஓ.பி.எஸ்-க்கு செல்வாக்கு உயர்ந்து வருகிறது. ஜூலை 11ல் பொதுக்குழு நிச்சயம் நடக்காது. என்று வைத்திலிங்கம் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil