அ.தி.முக உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தலையிடுவதில் தப்பே இல்லை. பா.ஜ.க தலையிட்டு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-ஐ இணைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பா.ஜ.க தலையிட்டு அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் விரும்புகிறார். ஜெயலலிதா இறந்த பிறகு, பல மாதங்களாக அ.தி.மு.க நெருக்கடியில் சிக்கியபோது அணிகளை ஒன்றிணைக்க பா.ஜ.க களமிறங்கியது. அதே போல, இப்போதும், பா.ஜ.க தலையிட்டு ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய அ.தி.மு.க தலைமையால் நீக்கப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய அணி புதன்கிழமை தனது கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-விடம், 2017-இல் செய்தது போல, இரு அணிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜெயலலிதா இறந்த பிறகு, பல மாதங்களாக அ.தி.மு.க நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியது.
ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், மற்றும் அவருடன் வெளியேற்றப்பட்ட அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் கூறுகையில், பா.ஜ.க கூட்டணியில் இருப்பதாலும், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இரு அணிகளும் பா.ஜ.க-வுடன் நல்ல உறவில் இருப்பதாலும் அ.தி.மு.க-வின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடுவதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமையிலான இரு அணிகளையும் ஒன்றிணைப்பதில் பாஜக முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும், தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வைத்திலிங்கத்தின் இந்த கருத்து, அணிகள் இணைவதற்கு உடன்படாத இ.பி.எஸ் அணியுடன் சமாதானம் செய்துகொள்ள ஓ.பி.எஸ் அணியின் நம்பிக்கையான முயற்சி என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபோல, ஓ.பி.எஸ் அணியினர் தங்கள் ஆதரவற்ற தன்மையை வெளிப்படுத்துவது இ.பி.எஸ் அணியை மேலும் உற்சாகப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஓ.பி.எஸ் மற்றும் வி.கே சசிகலா சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவரான வைத்திலிங்கம், ஓ.பி.எஸ் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விரைவில் சந்தித்த பிறகு அ.தி.மு.க தலைமை நெருக்கடி முடிவுக்கு வரும் என்று கூறினார்.
ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அ.தி.மு.க தற்போது பல அணிகளாகப் பிரிந்துள்ளது. 2017ஆம் ஆண்டு இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் இணைவதில், கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜ.க முக்கியப் பங்காற்றியது. மேலும், தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றியது. .
ஆனால், இம்முறை அ.தி.மு.க-வின் உட்கட்சி நெருக்கடியில் இருந்து விலகி நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.
“2017-ல் சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அ.தி.மு.க-வை பா.ஜ.க-தான் இணைத்தது. இதை ஓ.பி.எஸ் அவர்களே ஓரிரு முறை கூறினார். அ.தி.மு.க.வில் உள்ள பிரச்னைகளில் பா.ஜ.க தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து வைப்பதில் தவறில்லை. கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். பா.ஜ.க கூட்டணி கட்சி என்பதால் அ.தி.மு.க விவகாரத்தில் தலையிடலாம். தப்பே இல்லை” என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
ஊழல் வழக்குகளால் ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த இரண்டு முறையும் அவருக்கு ஆதரவாக நின்ற ஓ.பி.எஸ், 2017ஆம் ஆண்டு சசிகலாவுக்கு எதிரான மெரினாவில் நடத்திய தர்ம யுத்தத்துக்குப் பிறகு கட்சிக்குள் தனது செல்வாக்கை இழந்தார். இ.பி.எஸ் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு கட்சிக்குள் தனது நிலையை பலப்படுத்திக் கொண்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அ.தி.மு.க பலமான கட்சியாக இருக்கிறது.
2017-ல் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்றதால், அவர் சிறைக்கு செல்வதற்குமுன்பு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலை ஆன, சசிகலா அ.தி.மு.க-வில் இணைவதற்கான முயற்சியை இ.பி.எஸ் ஆல் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்தான், அ.தி.முக உள்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க தலையிடுவதில் தப்பே இல்லை. பா.ஜ.க தலையிட்டு இ.பி.எஸ்- ஓ.பி.எஸ்-ஐ இணைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்திருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.