கடந்த 2001-ம் ஆண்டு மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருது பெற்ற சின்னப்பிள்ளை காலில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஏன் விழுந்தார் தெரியுமா?
யார் இந்த சின்னப்பிள்ளை ?
மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புல்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் தான் சின்னப்பிள்ளை.
இவரின் தந்தை பெயர் பெரியாம்பளை , தாய் பெயர் பெருமி. இவருக்கு 12 வயது இருக்கும்போதே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெருமாள் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
வாஜ்பாய் மரணம்-இறுதி அஞ்சலி குறித்த செய்திக்கு இதை கிளிக் செய்யவும்
இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழுந்தைகள் பிறந்தது. சில தினங்களிலேயே இவரின் கணவர் பெருமாள் தீராத நோயினால் அவதிக்கு உள்ளானார். நோயின் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத கணவர் வீட்டிலேயே முடங்கி இருக்க, கூலி வேலை செய்து குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றினார்.
எழுதப் படிக்க தெரியவில்லை என்றாலும், அன்று அவருக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கையின் காரணமாக அந்த நாள் முதல் இன்று வரை தன் கிராமத்தில் இருக்கும் அனைத்து பெண்களின் வாழ்வியல் உரிமைக்காக போராடும் சாதனைப் பெண்ணாக இவர் விளங்குகிறார்.
மேலும் கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை. இதன் பிறகு தமிழகம் முழுக்க அவர் பிரபலமானார்.
சின்னப்பிள்ளைக்கு வழங்கப்பட்ட ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருது:
இதைத்தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருது சின்னப்பிள்ளைக்கு வழங்கப்பட்டது.
காலில் விழுந்த வாஜ்பாய்:
இந்த விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் அன்றைய பிரதமர் பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய் தனது கைகளால் சின்னப்பிள்ளைக்கு அளித்தார். மேடையில் விருதை வழங்கிய வாஜ்பாய் திடீரென அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
பதறிப்போன சின்னப்பிள்ளை, உடனே வாஜ்பாயின் கைகளை பற்றி அவரது காலில் விழுந்து ஆசியைப் பெற்றார். அப்போதைய பிரதமரின் இந்த செயலால் அரங்கமே அசந்துப் போனது.
பின்னர் மேடையில் பேசிய வாஜ்பாய், “மதுரை சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் 'ஷக்தி'யைப் பார்க்கிறேன்” என்றார்.
அந்த தருணத்தில், இந்தியா முழுவதும் சின்னப்பிள்ளையின் புகழ் மேலோங்கி நிற்க, அவர் குடும்பம் மட்டுமின்றி தமிழகமே பெருமைக் கடலில் மிதந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.