வாஜ்பாய் அஸ்தி, தமிழ்நாட்டில் சென்னை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் கரைக்கப்பட்டது. முன்னணி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி, கடந்த 22-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அஸ்தியை பெற்றுக்கொண்டார்.
தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
வாஜ்பாய் அஸ்தி இன்று (ஆகஸ்ட் 26) காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க எடுத்துச் செல்லப்பட்டது. பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி கோவில் அருகில் கடலில் அஸ்தி கரைக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் அஸ்தி கரைக்கப்பட்டது. பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் முக்கூடலிலும், தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேசுவரம் கடலிலிலும் கரைக்கப்பட்டது.
மத்திய கயிறு வாரியத்தின் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் பவானி முக்கூடலில் அஸ்தி கரைக்கப்பட்டது. கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி தலைமையில் மதுரை வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.