கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த சோலையார் அணை பகுதியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், வால்பாறையில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்கிறது.
வால்பாறையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.
இடைவிடாது பெய்த மழையால், வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை இடது கரை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த அவரது பேத்தி தனபிரியா (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி பாட்டி மற்றும் பேத்தியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர்கள் இறந்ததாகக் கூறினார்.
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பாட்டி மற்றும் பேத்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பொள்ளாச்சி அடுத்த திப்பம்பட்டி அண்ணாநகரை சேர்ந்த அன்பழகன் மகன் ஹரிஹரசுதன் (20) சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார்.
சோலையார் அணை உயிரிழப்பு குறித்து சேக்கல் முடி போலீசாரும், திப்பம்பட்டி ஹரிஹரசுதன் உயிரிழப்பு குறித்து கோமங்கலம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இருவேறு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“