/indian-express-tamil/media/media_files/2025/09/23/vanathi-seenivasan-2025-09-23-09-14-51.jpg)
ஜி.எஸ்.டி. குறைப்பு: கோவையில் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம்; கலந்துரையாடி கேட்டறிந்த வானதி சீனிவாசன்
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. குறைப்பு அமலுக்கு வந்த நிலையில், கோவையில் அதன் தாக்கம் குறித்து பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் கேட்டறிந்தார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது 5% மற்றும் 18% என இரண்டு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் உள்ளன. இதற்கு முன்பு 12% வரி அடுக்கில் இருந்த 99% பொருட்கள் 5% வரி வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் உள்ள தேநீர் கடைகள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களுக்குச் சென்ற வானதி சீனிவாசன், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். வியாபாரிகளின் கருத்து: அரசு அறிவித்த புதிய ஜி.எஸ்.டி. விகிதத்தின்படி விற்பனை செய்வதாகவும், இனிப்பு மற்றும் கார வகைகளின் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். புதிய விலையுடன் கூடிய ரசீதுகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
பொதுமக்களின் கருத்து: இருசக்கர வாகனம் வாங்கச் சென்றபோது, ஜி.எஸ்.டி. குறைந்த பிறகு வாங்கலாம் என ஷோரூம் ஊழியர்கள் கூறியதால், தற்காலிகமாக காத்திருந்து பிறகு வந்து வாங்கியதாகவும், இதுபோன்று மற்ற பொருட்களின் விலையும் குறைந்ததால் மேலும் பொருட்களை வாங்கியதாகவும் வாடிக்கையாளர் ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கட்டுமானத் துறை பலன்: மற்றொரு வாடிக்கையாளர் பேசும்போது, இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, கட்டுமானப் பொருட்களின் விலையும் குறைந்திருப்பது தங்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறினார்.
வானதி சீனிவாசனின் பேச்சு
வியாபாரிகளிடம் பேசிய வானதி சீனிவாசன், ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அப்போது ஒரு வியாபாரி, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நிறைய முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும், அதன் மூலம் இந்தியாவும், தாங்களும் வளர்ந்து வருவதாகவும் பெருமையுடன் தெரிவித்தார்.
வரி குறைப்பு மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் குறைந்த விலையில் அதிகப் பொருட்களை வாங்க முடியும் என்றும், அதன் மூலம் அவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார். மேலும், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் மக்களிடம் பேசியபோது, டீ மற்றும் காபி விலை குறைந்திருந்தாலும், முதல் நாள் என்பதால் மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு முழுமையாக வரவில்லை எனத் தெரிவித்தனர். விலை குறைப்பின் நோக்கம் சாதாரண மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும், எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.