கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள பாரதி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அமைச்சர்களுக்கு வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம், பொதுமக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் புரிந்து கொள்வதில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சருக்கு இவ்வளவு சீக்கிரமாக மறதி ஏற்படும் என எதிர்பார்க்கவில்லை. இன்று தியாக சுடராக அவரை பார்க்கும் முதலமைச்சர், அன்றைக்கு செந்தில் பாலாஜி ஊருக்கே சென்று அவருடைய வாயால் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பேசியதை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
இந்த மறதி தமிழகத்திற்கு நல்லதில்லை என்பது எங்களது கருத்து. செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் கொடுத்துள்ளது. நிபந்தனைகளை அவர் சரியாக பின்பற்றுகிறாரா என்பதை அமலாக்கத்துறை கண்காணிக்க வேண்டும்.
தமிழக அரசு அவருக்கு ஆதரவான நிலையில் இருக்கக்கூடிய சூழலில், அவரும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள சூழலில் அவரின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
செய்தி பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“