Advertisment

சூடுபிடிக்கும் அமரன் பட சர்ச்சை... 'இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கணும்': அரசுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

" 'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vanathi Srinivasan coimbatore BJP MLA on aran movie controversy Tamil News

"காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிளக்கத் துடிக்கும் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளை 'மண்ணுரிமைப் போராளிகள்' என்று போற்றுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.


பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Advertisment

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தமிழ்நாட்டு மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள அனைத்து இடங்களிலும் குடும்பம் குடும்பமாக இந்த திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி 'அமரன்' திரைப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பாராட்டியுள்ளார். 

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரரின் தியாக வரலாறு, தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் ஆழமாக சென்று சேருவதையும், மக்களிடம் தேசபக்தி பொங்கி எழுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாத சில சக்திகள், 'அமரன்' திரைப்படத்திற்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளனர். சில அடிப்படைவாத அமைப்புகள் 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளை முற்றுகையிட்டு சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவுள்ள, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வெளியிட்ட அறிக்கையில், "அமரன் என்ற திரைப்படம் மண்ணுரிமைப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

மண் உரிமைக்கும் தன்னுரிமைக்கும் ஜனநாயக வழியில் போராடியவர்கள் பலர் சீருடைகளில் ஒளிந்துள்ள  மிருகங்களால் வேட்டையாடப்பட்டனர். தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போல தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள்" என கூறியிருக்கிறார்.

இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமான காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளது. இப்போது இந்தியாவிடம் உள்ள காஷ்மீரை அபகரிக்க துடிக்கும் பயங்கரவாதிகளையும், இந்தியாவுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் பிரிவினைவாதிகளையும் மண்ணுரிமைப் போராளிகள் என்றும், தமிழ்நாடு எவ்வாறு மாநில உரிமைகளுக்காக போராடுகிறதோ அது போல தான் காஷ்மீர் மக்கள் தங்கள் மண்ணின் உரிமைக்காக போராடுகிறார்கள் என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்றுள்ள ஜவாஹிருல்லா கூறுவது கடும் கண்டனத்துக்குரியது. திமுக எம்.எல்.ஏ.வாக உள்ள அவரது இந்த கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

'அமரன்' திரைப்பட எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் அமைதியையும், சட்டம் - ஒழுக்கையும் சீர்குலைக்க சில அடிப்படைவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு வன்முறைக்காடாகி விடும். கோவை கலவரத்தால் ஏற்பட்ட இழப்புகளை மறக்க வேண்டாம் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவே முடியாத அங்கம். காஷ்மீரை தனி நாடாக்க வேண்டும் என்பவர்களை, 'மண்ணுரிமைப் போராளிகள்' என்று கூறுவது மன்னிக்க முடியாத குற்றம். பிரிவினைவாதிகளை, பயங்கரவாதிகளை யார், எந்த வழியில் ஆதரித்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ள அடிப்படைவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தேசத்தின் இறையாண்மையில் எந்தவொரு சமரசத்தையும் திமுக அரசு செய்யக் கூடாது. 'அமரன்' திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivakarthikeyan Tamil Nadu Govt Vanathi Srinivasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment