கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்ட நபர் வெளியேற்றப்பட்டார். சிறிது நேரத்தில் அந்த மர்மநபர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில், போக்குவரத்து புலனாய்வு போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றார்.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
இந்தநிலையில், நேற்று மாலை 5:50 மணி அளவில் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர், அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார் என கூறப்படுகின்றது. மேலும் கதவை சாத்திய மர்மநபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் பிடித்து வெளியேற்றினார்.
தொடர்ந்து இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்மநபர் புகுந்தது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே அண்ணா சிலை சிக்னல் அருகே அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடக்கும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உடலை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil