கோவை ரத்தினபுரி ஹட்கோ காலனி பகுதியில் சங்கனூர் ஓடையில் தூர்வாரும் பணிகள் மேற்கொண்ட போது, நேற்றுமுன் தினம் திங்கள்கிழமை இரவு ஒரு மாடி வீடும், அதன் அருகில் இருந்த இரண்டு ஓட்டு வீடுகளும் சரிந்து விழுந்தது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வானதி சீனிவாசன் பேசுகையில், "சங்கனூர் பள்ளத்தில் ஓடையை பலப்படுத்துவதற்காக கான்கிரீட் சுவர் எழுப்பும் பணிகளை செய்து வந்த போது பாதுகாப்பின்றியும் மக்களை அப்புறப்படுத்தாமலும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், வீடுகளை இழந்த மூன்று குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்கி இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டுகிறது. ஆனால் இதுவரை எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/4e93635f-45f.jpg)
மாநகராட்சி தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்ட அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அதுமட்டுமின்றி எங்களால் இயன்ற உதவிகளையும் செய்வோம். தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரியாமல் இருந்தால், அரசு எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறது என்று தான் நாம் கேள்வி எழுப்ப வேண்டி உள்ளது.
மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் மக்களுக்கு உதவாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இங்கு மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் அடிப்படை வசதிகள் பற்றிய புகார்களை அளிப்பதற்கு கூட மக்கள் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு தான் வருகிறார்கள். கோவையில் ஆற்று படுகைகளில் ஏழை மக்கள் தான் வசித்து வருகிறார்கள். மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம். ஆனால் அதற்கான முயற்சிகளை அரசு முன்னெடுப்பதில்லை.
இந்த ஆட்சி தொடங்கியதில் இருந்தே இளவரசருக்கு பட்டம் சூட்டுவதிலும், மந்திரிகளை பாதுகாப்பதிலும் தான் கவனம் செலுத்தி இருக்கிறார்களே தவிர, ஏழை எளிய மக்களை பற்றி கவலைப்படுவதில்லை" என்று அவர் விமர்சித்தார்.