/indian-express-tamil/media/media_files/2025/05/04/MtM91bGwZvzQX9Hh2R7b.jpg)
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து அண்மையில் விலகிய வைஷ்ணவி, தொடர்ந்து மக்கள் பணியாற்ற விரும்பினால் பா.ஜ.க-வில் இணையலாம் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில், வானதி சீனிவாசன் தலைமையில், புலியகுளம் பகுதியில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'நலம்' என்ற பெயரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது, "கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடைபெற்ற முகாமிலும் பொதுமக்களுக்கு ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஆனால், பாராட்டு விழா நடத்தி, தங்களை தாங்களே ஏமாற்றும் வேலையில் தி.மு.க-வினர் ஈடுபடுகின்றனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக நமது நாட்டின் கரத்தை மோடி வலுப்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மத பயங்கரவாதம் தமிழகத்தில் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், தமிழகத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பை நான் படித்துக் காட்டினேன்.
சென்னையில், ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு பயன்படுத்தப்பட்டதை பொதுமக்களே கண்டறிந்தனர். இவை அனைத்திற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை ஆகிய புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து வைகோ கருத்து கூறி இருக்கிறார். ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக அவர் இவ்வாறு பேசி வருகிறார். இந்த அமைப்புகள் மூலம் மக்களின் பணம் மீண்டும் மக்களிடமே கொடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகியது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பெண்கள் மற்ற துறைகளில் செல்ல விரும்பினால் ஆதரவு தெரிவிக்கும் குடும்பங்கள், அரசியலுக்கு செல்லும்போது ஆதரவு கொடுப்பதில்லை. எனினும், மக்கள் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அங்கீகாரம் அளிக்கும் கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. எனவே, மக்கள் பணியில் ஈடுபட விரும்புபவர்கள் பா.ஜ.க-வில் இணைந்து பணியாற்றலாம்" என்று அவர் கூறினார்.
செய்தி - பி. ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.