முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக நீதியை செயலில் காட்ட வேண்டும், பட்டியலினத்தை சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்குவாரா ஸ்டாலின் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் பேரனும் தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனும், தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின், புதன்கிழமை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். இதை, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சியினர் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அரை நூற்றாண்டு காலம் தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதியின் பேரனும், தந்தையின் மறைவுக்குப் பிறகு தி.மு.க தலைவராகவும், முதலமைச்சராகவும் ஆகியுள்ள மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகியுள்ளார். இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே தொடர்ந்து தொடர்ந்து 54 ஆண்டுகள் ஒரு அரசியல் கட்சி, ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது தமிழகத்தில்தான். அந்த பெருமை தி.மு.க-வுக்கு மட்டும்தான்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் என்பதால் இப்படிக் குறுகியகாலத்தில் இந்த உயரத்தை உதயநிதி ஸ்டாலினால் எட்ட முடிந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தி.மு.க-வில் நடக்கும் இந்த வாரிசு அரசியலை சுட்டிக்காட்டினால் தி.மு.க-வில் மட்டும்தான் வாரிசு அரசியல் இருக்கிறதா… பா.ஜ.க-வில் இல்லையா, ராஜ்நாத் சிங், எடியூரப்பா, வசுந்தரா ரஜே சிந்தியா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் மகன்கள் எம்.பி., எம்.எல்.ஏ-க்களாக இல்லையா என தி.மு.க-வினர் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அதில் எந்த நியாயமும் இல்லை.
நம் இந்தியா ஜனநாயக நாடு, 18 வயது பூர்த்தியடைந்த வாக்களிக்கும் தகுதிகொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் போட்டியிடலாம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதல்வராக, பிரதமராக வரலாம், அதில் எந்தத் தவறும் இல்லை, பா.ஜ.க-வும் அதைத் தவறு எனச் சொல்லவில்லை. ஆனால் வாரிசு அரசியல் என்பது ஒரு கட்சியின் தலைமை ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருப்பது. பிறப்பின் அடிப்படையில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கட்சியின் தலைவராக வருவதுதான் வாரிசு அரசியல். 49 ஆண்டுகள் தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி மறைந்ததும் அவருக்கு இணையாகக் கட்சிக்காக உழைத்த மூத்த தலைவர்கள் பலர் இருந்தும் ஸ்டாலினால்தான் தலைவராக முடிந்தது. இதற்குக் காரணம் கருணாநிதி மகன் என்பதுதானே… இதுதான் வாரிசு அரசியல். இது பெரும் சமூக அநீதி. அதைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது.
மூன்று முதல் நான்கு முறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக இருக்கும் திறமையான பலர் இருந்தும், எம்.எல்.ஏ-வாகி ஒன்றரை ஆண்டுகளிலேயே உதயநிதி அமைச்சராகிவிட்டார். மகனை அமைச்சராக்கி 35 பேர்கொண்ட அமைச்சரவையில் பத்தாவது இடத்தை அளித்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கியிருக்கலாம் அல்லது பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்காக உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில், வருவாய் போன்ற முக்கியத் துறைகளைக் கொடுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் தி.மு.க அரசை சமூகநீதி அரசு எனப் பாராட்டலாம். இனியாவது பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்க வேண்டும். முக்கியத் துறைகளை ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். சமூகநீதி, சமத்துவம் என்பதைப் பேச்சில் மட்டுமல்லாமல் செயலிலும் காட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“