சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மக்கள் சேவை மையம், தனியார் கல்லூரி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது, "சில விஷயங்களை குறிப்பிட நான் விரும்புகிறேன். சமூக ஊடகங்களில் சிறியதாக பதிவிடப்படுவதற்கே தமிழக காவல்துறை கைது நடவடிக்கையை கையாள்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பா.ஜ.க-வினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்கள் என அரசு குறித்து யார் விமர்சனம் செய்தாலும் குண்டாஸ் போடும் அளவிற்கு தி.மு.க செயல்படுகிறது. பா.ஜ.க-வையும் தான் விமர்சிக்கிறார்கள். மோடியை விமர்சிக்காத ஊடகங்களே கிடையாது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் போராட அனுமதி கேட்ட அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் சென்று ஆணை பெற்று ஒரு போராட்டம் நடத்தக் கூடிய சூழலில் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. மற்றொரு புறம் அன்றாடம் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் தி.மு.க-விற்கு தொடர்புடையவர்கள் ஈடுபடுவதை பார்க்கிறோம்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு மொத்தமாக சீர் கெட்டு விட்டது. அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட உரிமைகளுக்கு கூட நீதிமன்றம் சென்று தான் அமல்படுத்த முடியும் என்கின்ற சூழலில், இன்று எதிர்கட்சிகள் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமையை தி.மு.க நசுக்க பார்க்கிறது.
டெல்லி தேர்தல் முடிவுகளை உற்சாகத்தோடு எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இம்முறை டெல்லியில் மிகப்பெரிய மாற்றத்திற்கு மக்கள் தயாராகி இருக்கிறார்கள் என்பதை எங்களால் உணர முடிகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அனைத்து எதிர்கட்சிகளும் புறக்கணித்த நிலையில், தான் மட்டுமே சாம்பியன் என ஒற்றை ஆளாய் தி.மு.க நிற்கிறது. போட்டியிட ஆள் இல்லாத சூழலிலும் மக்களை அடைத்து வைப்பது, பணப்பட்டுவாடா ஆகியவை நடைபெறுகிறது.
கோவை மெட்ரோ ரயில் தொடர்பாக சட்டமன்றத்தில் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அதற்கான பணிகள் நடைபெறுகிறது. மத்திய அரசு தரப்பில் இருந்து பெற்று தர வேண்டிய உதவிகளை பெறுவதில் நாங்கள் முனைப்பாக இருக்கிறோம்.
நேரம் கிடைத்தால் நாளை 'விடாமுயற்சி' திரைப்படத்தை நிச்சயம் பார்ப்பேன்.
ஒரு கட்சி ஆரம்பித்தவுடன் அதன் அறிவிப்பிலேயே இவ்வளவு குளறுபடிகள் இருக்கிறது என்றால் ஒரு அரசியல் இயக்கம் எப்படி இயங்கும்? அடுத்தகட்டத்திற்கு செல்லுமா என்பது சந்தேகமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
செய்தி - பி.ரஹ்மான்