வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 80 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காவின் இயக்குனர் வி கருணப்பிரியா கூறுகையில், மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, எங்கள் தொழிலாளர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனைகளை வியாழக்கிழமை ஏற்பாடு செய்தோம்.அதன் முடிவுகள் சனிக்கிழமை வந்தன. அதில், 80 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அனைவரும் அறிகுறியற்றவர்கள். தற்போது, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும், வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூர் 17.01.2022 (நாளை) முதல் 31.01.2022 வரை பொதுமக்களுக்கு மூடப்படுகிறது. 31.01.2022 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று 23 ஆயிரத்து 989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. 11 பேர் உயிரிழந்தனர்.
இதன் மூலம், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 15 ஆயிரத்து 948 ஆக உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 967 ஆக உள்ளது. இதில், சென்னையில் மட்டுமே 8,989 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. வைரஸ் பரவலை தடுத்திட ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil