கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட மஜக நிர்வாகி : பழிவாங்க படுகொலை செய்யப்பட்ட பயங்கரம்

வாணியம்பாடி அருகே முன்விரோதத்தால் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் வசீம் அக்ரம் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

waseem akram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம். வாணியம்பாடி முன்னாள் நகரசபை உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தவர். இந்த நிலையில் நேற்று தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் திடீரென காரிலிருந்து இறங்கி வசீம் அக்ரமை கத்தியால் சரமாரியாக தாக்கி வெட்டி சாய்த்துவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடினர்.

ரத்த வெள்ளத்தில் வசீம் அக்ரம் கிடப்பது குறித்து அந்த பகுதி மக்கள் வாணியம்பாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரேத பரிசோதனைக்கு வசீம் அக்ரமின் உடலை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பேருந்து நிலையம், சி.எல். சாலை; மலங்கு சாலை ஆகிய பகுதிகளில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. பின்னர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்ட சடலத்தை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி பாபு, திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு) செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டனர்.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் அதிவேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது காரில் இருந்த 5 பேர் தப்பி ஓடிய நிலையில், 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் வாணியம்பாடியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், வண்டலூர் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரஷாந்த் மற்றும் டெல்லி குமார் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து பட்டா கத்திகள் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஷ் என்பவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதுகுறித்து வசீம் அக்ரம், காவல் துறைக்கு தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இம்தியாஷ் கூலிப்படையை வைத்து வசீம் அக்ரமை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்திற்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணைச் செயலாளர் வாணியம்பாடி வசீம் கொடூரமான முறையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்களுக்காக தொடர்ந்து பல சேவைகளை ஆற்றி வந்தவர். அம்மாவட்ட மக்களால் நன்கு அறியப்பட்டவர். மனித நேய ஜனநாயக கட்சியின் பல்வேறு அரசியல் பணிகளில் துடிப்போடு பங்கேற்று செயலாற்றியவர். காவல்துறை துரிதமாக செயல்பட்டு உண்மை குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vaniyambadi social activist mjk member waseem akram murder

Next Story
‘நாளை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்’ – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்!Tamil Nadu news in tamil: tomorrow tn to host mega vaccine camp says health Secretary
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com