திமுக தோழமைக் கட்சிகளின் முட்டல்: வைகோ மீது பாய்ந்த ‘சிறுத்தை’

Vanni Arasu: எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா?

Vanni Arasu Criticizes Vaiko: திமுக மீது தோழமைக் கட்சிகளுக்கு ஏற்பட்ட குமுறல் தீருவதற்குள், திமுக.வின் இரு தோழமைக் கட்சிகளுக்கு இடையே உருவான முட்டம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவைதான் அந்த இரு கட்சிகள்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் திமுக.வின் தோழமைக் கட்சிகளாக இருக்கின்றன. இந்தக் கட்சிகளை, ‘திமுக.வின் கூட்டணிக் கட்சிகள் அல்ல’ என ஒரு பேட்டியில் துரைமுருகன் குறிப்பிட்டார்.

இதற்கு ஆவேசமான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘இதை மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார். ஆனால் ஸ்டாலினை முந்திக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், ‘நான் ஏற்கனவே முன் மொழிந்ததையே துரைமுருகன் வழி மொழிந்திருக்கிறார். தொகுதி பங்கீடு முடிந்த பிறகுதான் கூட்டணி என கூற முடியும்’ என்றார்.

பின்னர் வைகோ அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரிடம் திமுக தரப்பில், மேற்படி விளக்கத்தையே தெரிவித்ததாக தெரிகிறது. இந்தச் சூழலில் தலித் முன்னேற்றத்திற்காக திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வைகோவிடம் பேட்டி கேட்கப்பட்டது.

அந்தப் பேட்டியில் நிறைவு கட்டத்தில் டென்ஷனான வைகோ, டி.வி மைக்கை தனது சட்டையில் இருந்து கழற்றி வீசிவிட்டு எழுந்து சென்றார். இது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக திருமாவளவனின் மனசாட்சியாக சொல்லப்படுபவரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளருமான வன்னியரசு தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை இட்டார்.

அதில் வன்னியரசு, ‘கடந்த இரு நாள்களாக சரியான தூக்கமில்லை. நான் பெரிதும் நேசிக்கக்கூடிய தலைவர் அவர். அவர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மனம் வேதனை கொள்கிறது. அந்தத் தலைவர் வைகோதான்.  என்னுடைய தலைவர் திருமாவளவனை எப்படி மதிக்கிறேனோ அப்படித்தான், வைகோ மீதான மதிப்பீடும். நான் மட்டுமல்ல விடுதலைச் சிறுத்தைகளில் பெரும்பான்மையோர் அப்படித்தான். அந்தளவுக்கு வைகோ மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் அவரின் நேர்காணலைப் பார்த்தேன்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கான அதிகாரப்பகிர்வை சரியாகத் தந்துள்ளதா என்னும் நியாயமான கேள்வியை முன்வைத்தார். அதற்கு மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம். அதற்கான காரணங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், வைகோ அதற்குப் பதில் அளிக்காமல், “தலித்துகளுக்கு எதிராக என்னைக் காட்ட முயற்சி செய்கிறீர்களா? எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள்தான்” என்று சொல்கிறார்.

இந்த உளவியலை ஓர் ஆதிக்க உளவியலாகப் பார்க்கிறோம். பண்ணை அடிமை உளவியலாக, நிலப்பிரபுத்துவ உளவியலாகத்தான் பார்க்கிறோம். தலித்துகள் அதிகாரம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை? பதற்றமடைவது, கோபமடைவது எதைக்காட்டுகிறது?

தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் உள்ளவர் வைகோ. சமூக நீதிக்கோட்பாடு, பகுத்தறிவு, தந்தை பெரியார் என்று பயணப்பட்டுக்கொண்டிருப்பவர். சமூக மாற்றத்தை விரும்புபவர்தான்.

தலித்துகள் விடுதலை குறித்த அக்கறை உள்ளவர்தான். ஆனால், எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்வதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்பந்தம்’ இருக்கிறதா? இடைநிலை சாதிகளுக்கு அதிகாரம் வந்ததைப்போல தலித்துகளுக்கு வந்ததா? என்ற கேள்வி மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் பீறிடும் கேள்விகள்.

அந்த நடப்பு யதார்த்தத்தைப் புரிந்துகொண்டுதான் பயணப்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு கடைநிலை மக்களுக்கும் கிடைக்கும் வரை இன்னும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. இடைநிலை சாதிகளிடம் ஆட்கொண்டுள்ள சனாதன – சாதிய சிந்தனைகளை களைந்து, சமத்துவத்துக்கான சிந்தனைகளைப் பரப்ப வேண்டிய பணிகளையும் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

அந்த வகையில், கடைசி மனிதனுக்கான ஜனநாயகத்துக்காகவும் எளிய மக்களுக்கான அதிகாரத்துக்காகவும் களமாட வேண்டிய தேவையிருக்கிறது. அதுவரை ஊடகங்கள் மட்டுமல்ல, எல்லோருமே கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம்தான் கூடுதலாக எழும்!’ என குறிப்பிட்டார் வன்னியரசு.

வைகோ குறித்து வன்னியரசு வெளியிட்ட இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வைகோவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘வன்னியரசுவை இப்படி பதிவு செய்ய வைத்தது யார்?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு இன்று திருமாவளவன் பதில் கூறுகையில், ‘வைகோவின் கோபம் என் மீதா? வன்னியரசு மீதா?’ என கேள்வி எழுப்பினார். வன்னியரசுவை தான் கண்டித்ததாகவும், அதனால் தனது பதிவை வன்னியரசு நீக்கியதாகவும் திருமா குறிப்பிட்டார்.

வன்னியரசு பதிவு, அதைத் தொடர்ந்து வைகோ, திருமாவளவன் ஆகியோரது பதில்கள் ஆகியன அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close