/indian-express-tamil/media/media_files/2025/09/25/vanni-arasu-vck-kkc-balu-kalaimamani-awards-tn-government-tamil-news-2025-09-25-19-14-53.jpg)
'சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும்' என்று வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.
சினிமா, கலைத்துறையில் சேவை புரிந்தவர்களை கவுரவப்படுத்தும் வகையில் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, சாய்பல்லவி, அனிருத் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.
இந்த நிலையில், கே.கே.சி.பாலுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "தமிழ்நாடு அரசுக்கான 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கலை, இலக்கியம், சினிமா என பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளுக்கு இந்த கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வரவேற்க கூடியது.
இந்தாண்டுக்கான கிராமிய கலைகளுக்கான கலைமாமணி விருதுகளில், கிராமிய பாடகர்களுக்காக திரு.வீர சங்கரும்,பொய்க்கால் குதிரை ஆட்டத்துக்காக திருமதி காமாட்சி அவர்களும் நையாண்டி மேள நாதஸ்வரத்துக்காக திரு.மருங்கன், பெரிய மேளத்துக்காக திரு. முனுசாமி அவர்களும் கலைமாமணி விருது பெறுகின்றனர். விருதாளர்களுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்.
இந்த வரிசையில் வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி பாலு என்பவருக்கும் கலைமாமணி விருதை தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் “வேறு சாதி ஆண்களை திருமணம் செய்ய மாட்டோம்” என சத்தியம் வாங்கி வருகிறார் சாதியவாதி பாலு. இது குடிபெருமை பேசி, சனாதனத்தை நிலை நிறுத்தும் நாகரீக சமூகத்துக்கு எதிரானதாகும். பெண்கள் தங்களது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமைகளுக்கு எதிரானதாகும். அதுவும் பெண் விடுதலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தந்தை பெரியார் மண்ணிலிருந்தே இந்த சனாதன நச்சுக்கருத்தியலை முன்னெடுத்து வரும் திரு.கேகேசி பாலு அவர்களுக்கு கலைமாமணி விருதை அறிவித்திருப்பது சாதியத்தை ஊக்கப்படுத்துவதாகவே அமையும். ஆகவே, தமிழ்நாடு அரசு பாலுவுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருதை திரும்ப பெறவேண்டும். சாதியத்தை பரப்பிவரும் வள்ளிகும்மியை தடை செய்ய வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.