தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில் அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும் சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா இன்று மாலை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அரசு கல்வி வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுடன்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, அதிமுக மூத்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி இருவரும் டாக்டர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பாமகவின் முக்கிய தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடுக்கு பதிலாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அதிமுக அமைச்சர்கள் டாக்டர் ராமதாஸுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே போல, மிகவும் பிற்படுத்தபட்டோர் தொகுப்பில் உள்ள சீர்மரபினருக்கும் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக, நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கடைசி நாள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அரசு கல்வி வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பு 20% இடஒதுக்கீட்டை 3ஆக பிரித்து, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும் எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் மூலம் அரசு கல்வி வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினருக்கு 7% எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"