இனியும் பொறுக்க முடியாது; 10 நாளில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் அளிக்க வேண்டிய அறிக்கையை 30 மாதங்களாகியும் அளிக்க முடியவில்லை என்றால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வேறு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது?

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் அளிக்க வேண்டிய அறிக்கையை 30 மாதங்களாகியும் அளிக்க முடியவில்லை என்றால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வேறு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது?

author-image
WebDesk
New Update
anbumani ramadoss

Anbumani Ramadoss

10 நாளில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்ம்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ‘தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு  வரும் 11&ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. வெறும் 3 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்ட காலக்கெடு 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டும் கூட, ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது வன்னிய மக்கள் மீது திமுக அரசு எந்த அளவுக்கு வன்மத்தைக் குவித்து வைத்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்றும், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் 2022&ஆம் ஆண்டு மார்ச் 31&ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின் 1188 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் வன்னியர்கள் முன்னேறிவிடக் கூடாது என திமுக அரசு நினைப்பது தான் என்பதைத் தவிர வேறில்லை.

திமுக அரசு நினைத்திருந்தால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஒரு மாதத்திலேயே உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். அதன் மூலம் 2022ஆம் ஆண்டில் தொடங்கி வன்னிய மாணவர்கள் இட ஒதுக்கீட்டின் பயன்களை அனுபவித்திருக்க முடியும். ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிக் கூட சட்டம் இயற்ற தயாராக இருப்பதாக என்னிடம் உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னொரு பக்கம் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

Advertisment
Advertisements

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி 10 மாதங்கள் கழித்து 12.01.2023 ஆம் நாள் தான் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரை அளிக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நினைத்திருந்தால், அரசால் வழங்கப்பட்ட 3 மாத காலக்கெடுவுக்குள் தரவுகளைத் திரட்டி, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைத்திருக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்கள் எழுதிக்கொடுத்த திரைக்கதையின்படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தரவுகளைத் திரட்ட முடியவில்லை என்று கூறி காலநீட்டிப்புக் கேட்டுக் கொண்டிருந்தது. தமிழக அரசும் முதலில் கொடுத்த 3 மாதங்கள் போதாது என பின்னர் 6  மாதம், அடுத்து இன்னொரு 6 மாதம், பின்னர் 3 மாதம், அதன்பின் 12 மாதங்கள் என காலக்கெடுவை  விருப்பம் போல நீட்டித்துக் கொண்டே சென்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இதுவரை 30 மாதங்கள் காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில், அதுவும் வரும் 11&ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான திசையில் ஓர் அடியைக் கூட திமுக அரசும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் எடுத்து வைக்கவில்லை.   முதலில் தரவுகளைத் திரட்ட மனிதவளம் இல்லை என்று கூறி, பரிந்துரை அளிப்பதை தாமதப்படுத்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இருந்தால் மட்டும் தான் அதனடிப்படையில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்க முடியும் என்று முரண்டு பிடிக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் பணியே சமூகநீதியை நிலைநாட்டுவது தான். சட்டநாதன், அம்பாசங்கர், நீதியரசர் ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையிலான ஆணையங்கள்  அதைத் தான் செய்தன. ஆனால், இப்போதுள்ள ஆணையம், திமுக அரசின் கைப்பாவையாக மாறி சமூகநீதியை படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இதற்காக ஆணையம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் அளிக்க வேண்டிய அறிக்கையை 30 மாதங்களாகியும் அளிக்க முடியவில்லை என்றால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வேறு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டி, அதனடிப்படையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது பரிந்துரை அளிக்க ஆணையம் தயங்குவது ஏன்?

ஒருவேளை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், அதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இருக்கும் நிலையில், அதை செய்யாமல் ஆணையம் தாமதிப்பது ஏன்?

என்பன உள்ளிட்ட வினாக்களை பா.ம.க. பல முறை எழுப்பியும் திராவிட மாடல் அரசு எந்த பதிலும் அளிக்காமல் பேசா மடந்தையாக அமைதி காத்து வருகிறது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தலைமைச் செயலகத்திற்கு 100 முறைக்கு மேல் பாட்டாளி  மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் படையெடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மூன்று முறையும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரை ஒரு முறையும் நான் சந்தித்து பேசியுள்ளேன். மருத்துவர் அய்யா அவர்கள் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை எழுதியது மட்டுமின்றி, பல முறை தொலைபேசி வாயிலாகவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் முதலமைச்சரை அவர் நேரில் சந்தித்தும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வளவுக்குப் பிறகும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க தி.மு.க. அரசு மறுக்கிறது என்றால், அது வன்னியர்களுக்கு எதிராக எவ்வளவு வன்மங்களையும், வஞ்சனைகளையும் சுமந்து கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். இந்த சமூக அநீதியை இனியும் பொறுக்க முடியாது.

தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் எந்த ஒரு இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்கவும் இவ்வளவு அதிக கால அவகாசத்தை பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் எடுத்துக் கொண்டதில்லை. சமூகநீதியைக் காப்பதாகக் கூறிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் அரசு தான் 30 நாள்களில் வழங்கப்பட வேண்டிய சமூக நீதியை 30 மாதங்களுக்கு மேலாகியும் வழங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த பாவச் செயலுக்கு திராவிட மாடல் அரசு பரிகாரம் தேடுவதற்கான தருணம் வந்து விட்டது.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்கான தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட காலக்கெடு வரும் 11ஆம் தேதியுடன் நிறைவடைவிருக்கும் நிலையில், இனியும் காலநீட்டிப்பு வழங்கக் கூடாது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதால், வன்னியர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த தரவுகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து அடுத்த 10 நாள்களுக்குள் பரிந்துரை அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும். அதனடிப்படையில், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”, இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார். 

Anbumani Ramadoss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: