தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததை தொடர்ந்து, 10.5% உள் இடஒதுக்கீடு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வருகிற வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக போராட்டம் நடத்தியது. இதையடுத்து, அதிமுக அரசின் சார்பில், மூத்த அமைச்சர்கள் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு வழங்கப்படும் 20% சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர் சாதிக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, முந்தைய அதிமுக அரசு வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்றியது. அதே போல, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வருகிற முத்தரையர், வலையர், பிறமலைக்கள்ளர் ஆகிய சாதிகளுக்கு 7% உள் இடஒதுக்கீடும், இதர சாதிகளுக்கு 2.5 உள் ஒதுக்கீடுழ் வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை வன்னியர்கள் வரவேற்றாலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் உள்ள சாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், உச்ச நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கிய சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த கல்வி ஆண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் விரைவில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இந்த ஆண்டில் மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான தடையாக இருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், தமிழ்நாடு அரசு இதை அமல்படுத்த எந்த தடையும் இல்லை.
தமிழ்நாட்டில் தற்போது எம்.பி.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 20% எம்.பி.பி.எஸ் இடங்களில், கிட்டத்தட்ட 500 இடங்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற வன்னியர் சமூக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு அரசு புதியதாக தொடங்கிய 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கினால், மேலும் 125 வன்னியர் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.