திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சித்தநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி. இவர் மற்றும் அவரது தங்கை காந்திமதி ஆகியோர் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். காந்திமதி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு வையாபுரி மணப்பாறை வட்டம் செட்டி சித்திரம் கிராமத்தில் 1200 சதுர அடி கொண்ட காலி மனை ஒன்றினை ஒரு லட்ச ரூபாய்க்கு கடந்த 21-02-2024 அன்று வாங்கி தந்தார். இவர்கள் வாங்கிய காலி மனைக்குரிய பட்டா பெயர் மாற்றம் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைன் மூலமாக சம்பந்தப்பட்ட சித்தநத்தம் வி.ஏ.ஓ அலுவலகத்தின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதன் பேரில் சமுத்திரம் வி.ஏ.ஓ கூடுதல் பொறுப்பு சித்தாநத்தம் வி.ஏ.ஓவாக உள்ள சிவ.செல்வகுமார் என்பவர் வையாபுரியை தொலைபேசியில் அழைத்து பட்டா பெயர் மாற்றத்திற்கு உண்டான ஆவணங்களை எடுத்து வருமாறு கூறியுள்ளார். அதன் பேரில் வையாபுரி கடந்த 1.3.2024 மதியம் பட்டா பெயர் மாற்றத்துக்கு உண்டான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சித்தாநத்தம் விஏஓ அலுவலகம் சென்று அங்கிருந்த விஏஓ சிவ. செல்வகுமாரை சந்தித்து ஆவணங்களை கொடுத்துள்ளார்.
ஆவணங்களை சரிபார்த்த பின்னர் விஏஓ செல்வகுமார் தனக்குத் தனியாக 2000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு உடனடியாக பரிந்துரை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு வையாபுரி தான் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறேன் என்று கெஞ்சி கேட்டதால், விஏஓ சிவ. செல்வகுமார் தான் கூறிய தொகையில் பாதியை குறைத்து கொண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வையாபுரி திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர்ராணி மற்றும் குழுவினருடன் இன்று 5.3.2024 மதியம் சமுத்திரம் விஏஓ அலுவலகத்திற்கு சென்ற வையாபுரி விஏஓ சிவ.செல்வகுமாருக்கு ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை கொடுத்திருக்கிறார். வையாபுரியிடமிருந்து 1000 ரூபாய் லஞ்ச பணத்தை பெற்ற போது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவ.செல்வகுமாரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி அவர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“