ஜி.கே.வாசன் கடத்திய  ‘புல்லட்’ , பரிதவித்த தொண்டர் : செம ஜாலி ‘கிட்நாப்’

ஜி.கே.வாசனிடம் ‘புல்லட்’டை கொடுத்துவிட்டு, தொண்டர் ஒருவர் பரிதவித்த நிகழ்வு நடந்தது. செம ஜாலியாக அந்த புல்லட்டை வாசன் ‘கிட்நாப்’ செய்ததுதான் ஹைலைட்!

ஜி.கே.வாசனிடம் ‘புல்லட்’டை கொடுத்துவிட்டு, தொண்டர் ஒருவர் பரிதவித்த நிகழ்வு நடந்தது. செம ஜாலியாக அந்த புல்லட்டை வாசன் ‘கிட்நாப்’ செய்ததுதான் ஹைலைட்!

ஜி.கே.வாசன், கட்சியின் சாதாரண தொண்டர்களிடமும் எளிமையாக பழகக் கூடியவர்! மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் ஆகட்டும், பரபரப்பு இல்லாமல் த.மா.கா.வை நடத்திக் கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் ஆகட்டும், அவரது வீட்டில் தொண்டர்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. கட்சிப் பொறுப்பில் இல்லாதவர்களைக்கூட பெயர் கூறி அழைத்து, சகஜமாக தன் அருகில் உட்கார வைத்து உரையாடுவதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி!

வாசன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், தொண்டர்கள் மத்தியில் அவரது சிறுசிறு வேடிக்கை நிகழ்ச்சிகள் பிரபலம்தான். அப்படியொரு வேடிக்கை நிகழ்ச்சி நேற்று (பிப்ரவரி 2) நடந்தது. த.மா.கா. சிறுபான்மை பிரிவு அலுவலகம் திறப்பு விழா, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதில் வாசன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

வாசன் அங்கிருந்து காரில் கிளம்ப ஆயத்தமானபோது, தொண்டர் ஒருவர் புதிதாக ‘புல்லட்’ பைக் வாங்கியிருப்பதாக வாசனிடம் வந்து கூறி, பெருமிதப்பட்டார். அவரிடம், பைக் சாவியைக் கேட்டு வாங்கினார் வாசன். அடுத்து, ‘ஹெல்மட் இருக்கா?’ என கேட்டார். அதையும் தொண்டர் எடுத்துக் கொடுத்ததும், வாசன் தனது தலையில் அதை அணிந்து கொண்டார்.

த.மா.கா.வினர் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, புல்லட்டை ‘ஸ்டார்ட்’ செய்த வாசன் அங்கிருந்து பறந்துவிட்டார். அப்போதும், ‘தலைவர் கொஞ்ச தூரம் போய்விட்டு திரும்பி வருவார்’ என்றுதான் கட்சிக்காரர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கே சென்றுவிட்டார்.

அங்கிருந்து பிறகு தேனாம்பேட்டையில் நின்றிருந்த கட்சிக்காரர்களை தொடர்புகொண்டு, தான் வீட்டுக்கு வந்துவிட்டதை தெரிவித்தார் வாசன். அந்தத் தொண்டரை தனது வீட்டுக்கு வந்து வண்டியை பெற்றுக்கொள்ள கூறியிருக்கிறார் வாசன். இதில் அந்தத் தொண்டருக்கும் பெருமை கலந்த மகிழ்ச்சிதான்! வாசனின் இந்த ‘கிட்நாப்’பால் கட்சி நிர்வாகிகளுக்குத்தான் உயிர் போய், திரும்ப வந்தது.

 

×Close
×Close