/tamil-ie/media/media_files/uploads/2020/08/ks-alagiri-vasantha-kumar.jpg)
Tamil nadu news today
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் நடைபெறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு அண்மையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே போல, அவருடைய மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “காங்கிரஸ் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வசந்தகுமார் வென்டிலேட்டரில் சுவாசம் செய்யும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதே போல, விரைவில் குணமடைந்து நம்முடன் ஐக்கியமாகி இயக்க பணிகளிலும் சமூகப் பணியிலும் பெரும் தொண்டாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, “எங்களுடைய முதல் தேர்தல் பரப்புரை திருப்பூர் மாவட்டத்தில் துவங்குகிறது. ஒவ்வொரு வாரமும் 3 சட்டமன்ற தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அந்த தொகுதிகளில் வாக்குச்சாவடி கமிட்டிகளை அமைத்து தோழமை கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் பரப்புரையை துவங்க உள்ளோம். வருகிற 20ம் தேதி காங்கிரஸின் தேர்தல் பரப்புரை தொடங்க உள்ளது.” என்று கூறினார்.
மதுரையை 2வது தலைநகராக மாற்றுவது குறித்த விவாதம் எழுந்துள்ளது குறித்து பேசிய கே.எஸ்.அழகிரி, மதுரையை 2வது தலைநகரமாக மாற்றுவது சிறந்தது. அதற்கு அரசு முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் தென் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று கூறினார்.
மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.