கொரோனா பெருந்தொற்றல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்த கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமாரின் இரங்கல் நிகழ்வில் சமூக விலகல் நெறிமுறை கடைபிடிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவ பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக மருத்துவமையில் வசந்தகுமார் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில்," உடல்நிலை சீராக இருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தது. ஆகஸ்ட் 27 அன்று வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் ஆகஸ்ட் 28, அன்று மாலை சுமார் 7 மணி அளவில் வசந்தகுமார் கோவிட் நிமோனியா சிக்கல்களால் மரணமடைந்தார் " என்று தெரிவிக்கப்பட்டது.
வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் முதலில் வைக்கப்பட்டது. இங்கு, வசந்த் & கோ ஊழியர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், உறவினர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் வசந்தகுமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், சனிக்கிழமை காலை, காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வசந்தகுமாரின் உடலை நல்லடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சத்தியமூர்த்தி நிகழ்வு ரத்து செய்யப்பட்டதோடு, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கிற்கு வெளியே காங்கிரஸ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காமராஜர் அரங்கத்தில் எச்.வசந்தகுமார் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கட்சத் தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், வசந்தகுமாரின் உடல் சாலை மார்க்கமாக கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இன்று இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது.
பொது இடங்கள் மற்றும் வாகனங்களில் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இறப்பு / இறுதிசடங்குகளில் அதிகபட்சம் 20 பேர் கலந்து கொள்ளலாம் என்று மத்திய அரசின் வழிமுறைகள் தெரிவிக்கின்றன. இறந்த உடலை நிர்வாகம் செய்வதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. நோய் தொற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், இறந்த உடலை கையாண்டு நோய் தொற்று இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிகின்றன.
இறக்கும் தருவாயில் வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கட்டாயம் தங்களை குறைந்தது 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வழிமுறைகள் தெரிவிகின்றன.
சமூக விலகல் நெறிமுறை விதிமுறைகளை பின்பற்றாமல், நூற்றுக்கணக்கான மக்கள் வசந்தகுமாருக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தி வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil