அதிகாரப் பகிர்வு, வி.சி.க-வுக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என குரல் எழுப்பி தி.மு.க-வை விமர்சித்த வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, வி.சி.க தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தாலும், அரசியல் பக்குவமில்லாத பேச்சு என வி.சி.க எம்.பி ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு அறிவித்ததில் இருந்தே தமிழக அரசியலில் அவருடைய பெயர்தான் ஹாட் டாபிக். அதோடு விடாமல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு அதிரடித்தார். ஆனால், திருமாவளவன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பிறகு, எல்லாம் சுமூகமாகிவிட்டதாக கருதிய நிலையில், வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, வி.சி.க-வுக்கு துணை முதல்வர் பதவி கேட்டு தி.மு.க-வை விமர்சித்து சரவெடியாக வெடித்திருக்கிறார்.
வி.சி.க துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒரு நேர்காணலில், “4 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்குவதில் தவறில்லையே” என்று கூறியிருந்தார்.
மேலும், “வி.சி.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் போது அவர்களையே நம்பி இருக்கும் சமூகங்கள் முழுமையாக பயனடையும், அதனால் விசிகவை அதிகாரத்திலும் பங்கெடுக்க வைப்பதுதான் எனது நோக்கம்” என்று கூறியிருந்தார்.
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தி.மு.க கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறுகிறார்கள்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு வி.சி.க தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், அரசியல் பக்குவமில்லாத பேச்சு என வி.சி.க பொதுச் செயலாளரும் எம்.பி-யுமான ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.
தி.மு.க வட மாநிலங்களில் வி.சி.க துணையில்லாமல் வெற்றி பெறாது என ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு வி.சி.க எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் ரவிக்குமார் எம்.பி கூறியிருப்பதாவது: “ஆதவ் அர்ஜூனா பேசியது உண்மைக்கு புறம்பானது மற்றும் அரசியல் பக்குவமில்லாத பேச்சு. கொள்கைகள் அடிப்படையிலேயே தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருப்பதை அளவிட வேண்டும். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு விசிக உதவியது. அதே போல் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் 2 எம்.பி தொகுதிகள் மற்றும் 4 எம்.எல்.ஏ தொகுதிகளில் வி.சி.க வெற்றி பெற்றது. அதனை மறுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாக வி.சி.க எம்.பி ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “விழிப்போடு இருப்போம்!
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் , மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் கொள்கை வழியில் எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் தலைவர் எழுச்சித் தமிழர்
திருமாவளவன் இன்று இந்திய அளவில் உற்று நோக்கப்படும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உருவாக்கி இருக்கிறார். சனாதனத்துக்கு எதிரான சமரசமற்ற அவரது நிலைப்பாடுதான் அதற்கு முதன்மையான காரணம்.
‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது!
சனாதனிகளின் அரசியலை வீழ்த்துவது!’
என்ற நமது இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை. நமது கொள்கை எதிரிகள் இன்னும் அதிகாரப் பீடத்திலிருந்து அகற்றப்படவில்லை. அவர்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்துக் காய் நகர்த்துகிறார்கள். தாம் செல்வாக்கு பெறுவதற்கு ஏதுவாகத் தமது எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிப்பது அவர்களின் உத்திகளில் ஒன்று.
தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளிலும் முன்னிலும் விழிப்போடு இருக்க வேண்டும்.
‘ சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விட்டுவிடக்கூடாது ’ என்பதே 2026 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“