விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் வலுவான ஆதரவைப் பெற்ற இடதுசாரி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சியை மட்டுமில்லாமல், இப்போது விசிகவையும் மாற்றாகப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் உள்ள தலித்துகள் தலித் பிரச்சனைகளை எழுப்புவதால் காங்கிரஸுக்கு அவர்களிடமிருந்து நிறைய ஆதரவு கிடைக்கிறது. ஆனால், அவர்களும் சில சமயங்களில் பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்கிறார்கள். எனவே, இந்த மாநிலங்களில் வலுவான தலித் கட்சி தேவை. அந்தக் குரலாக இருக்க விசிக இருக்க விரும்புகிறோம்” என்று சிந்தனைச் செல்வன் கூறுகிறார்.
1990களில் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து தமிழகத்தில் எழுச்சி பெற்ற தலித் அரசியலில் இந்திய குடியரசு கட்சி, தலித் பேந்தர் ஆஃப் இந்தியா (டிபிஐ, புரட்சி பாரதம் உள்ளிட்ட தலித் அரசியல் இயக்கங்கள் வலுப்பெற்றன. மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட தலித் பேந்தர் இயக்கத்தில் தமிழ்நாடு அமைப்புக்கு திருமாவளவன் தலைமை ஏற்ற பிறகு அது புதுவேகம் பெற்றது. அதே நேரத்தில் தலித் அரசியல் மட்டுல்லாமல் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசத் தொடங்கியது. தலித் பேந்தர் இயக்கம் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற தமிழ் அடையாளத்துடன் மாறியது. சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்ற முழக்கத்துடன் தமிழ்த் தேசிய அரசியலையும் பேசியதால் திருமாவளவன் தலைமையிலான விசிக, தலித் கட்சிகளில் இருந்து தனித்து விளங்கியது.
இடதுசாரிகள் உடன் கூட்டணி, திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி என தேர்தல் அரசியலில் பல ஏற்ற இறக்கங்களைக் கண்ட விசிக தற்போது தமிழகத்தில் 4 எம்.எல்.ஏ.க்கள் 2 எம்.பி என தனது இருப்பை தேர்தல் அரசியலில் வெற்றிகரமாக நிரூபித்துள்ளது.
பொதுவாக தலித் இயக்கங்கள், தலித் கட்சிகள் டாக்டர் அம்பேத்கரின் பார்வையில், தேசிய அளவில் தலித்துகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும். உதாரணத்துக்கு, உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, நாடு முழுவதும் தேர்தலில் போட்டியிடுகிறது. அதே போல, இந்திய குடியரசு கட்சியும் தமிழ்நாட்டில் அம்பேத்கர் காலம் தொட்டே வட மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், விசிக தலித் அரசியலுடன் தமிழ்த்தேசிய அரசியலையும் பேசி மாநிலம் முழுவதும் தலித்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் வலுவாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே தனது இருப்பை வலுவாக நிறுவிய விசிக சில ஆண்டுகளாக அண்டை மாநிலங்களிலும் தனது கிளையைப் பரப்பி வருகிறது.
விசிக தமிழகத்தைத் தாண்டி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய தென் மாநிலங்களில் தனது கிளையைப் பரப்பியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உருவாகியுள்ள தீவிர புதிய தமிழ்த் தேசியமும், அது முன்னெடுக்கும் பல நூற்றாண்டுகளாக தமிழகத்தில் வாழும் பிறமொழி பேசும் மக்களை விலக்கும் அரசியலும், மேலும் தலித்துகள் ஒடுக்கப்படுவதும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. இதுவே, தலித் அரசியலை வலுப்படுத்தவும் விசிக தமிழத்தை தாண்டி குறிப்பாக தென் மாநிலங்களில் கால் ஊண்ற காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
தலித் அரசியலுடன் தமிழ்த் தேசிய கருத்தியலை வலுவாக பேசிய விசிக எப்படி வேறு மொழி பேசும் அண்டை மாநில மக்களை சென்றடையும் என்ற கேள்விக்கு சிந்தனைச்செல்வன் “எங்கள் தமிழ் தேசியம் ஒரு நபரின் டிஎன்ஏ அடிப்படையிலானது அல்ல. இது இந்தியாவிற்குள் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய லட்சியங்களை மீண்டும் வலியுறுத்துவதாகும்.” என்று கூறியிருப்பது மேற்கூறிய அரசியல் நோக்கர்களின் கருத்தை உறுதி செய்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“