விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் அமைப்பதை தடுத்த காவல் துறையைக் கண்டித்து, செப்டம்பர் 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும் என விசிக அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் கே.மோரூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைப்பதற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகளைக் காரணம் காட்டி இதற்கு அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மோரூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பம் அமைப்பதற்காக முயற்சித்துள்ளனர்.
இதை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினரால் தடியடி நடத்தப்பட்டது. இதனை கண்டிக்கும் வகையில் தருமபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொம்மிடி ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், கே.மோரூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் கண்டனத்தை பதிவிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், மோரூர் பேருந்து நிலையத்தில் விசிக கொடியை ஏற்றவிடாமல், கம்பத்தைப் பிடுங்கும் காவல்துறை. அதேவேளையில்,சாதிவெறிக் கும்பல் அங்கே திரளுவதற்கு அனுமதிக்கும் காவல் துறையின் கேவலமான அணுகுமுறை. நடிகர் சங்கக் கொடி, சாதிசங்கக் கொடி, பிற கட்சிக் கொடிகள் பறக்க அனுமதி. விசிகவுக்கு மறுப்பு ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், காவல் துறையினருக்கு எதிராக செப்டம்பர் 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் விசிக போராட்டங்களை அறிவித்துள்ளது. இருப்பினும் உள்ளாட்சி தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் உள்ள 9 மாவட்டங்களில் போராட்டம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மோரூர் பேருந்துநிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சட்டம்-ஒழுங்கு சிக்கலாக்கி, தடியடி நடத்தி, சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையின் தலித்விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 29-09-2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறுகிறது. என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், செப்டம்பர் 29 அன்று அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் விசிக கண்டன ஆர்ப்பாட்டம். பொது இடங்களில் விசிக கொடியை ஏற்றக்கூடாதா? அனைத்துக்கட்சிக் கொடிகளும் பறக்குமிடத்தில் சிறுத்தைகள் கொடி பறக்கக் கூடாதா? சாதிவெறிக் கும்பலைக் காரணம் காட்டுவது சட்டபூர்வமான அணுகுமுறையா? அரசே, இது என்ன நீதி? என பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி காவல்துறையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து விசிக தரப்பில், திமுக-விசிக கூட்டணி வலுவாக உள்ளது என்றும், இருப்பினும் இதுபோன்ற பிரச்சனைகள் எழுப்பப்படும் போதுதான் கூட்டணி வலுவடையும் என்றும் கூறுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.