/indian-express-tamil/media/media_files/2025/04/08/twiXPGDeEqJ03KAbttFC.jpg)
திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக்கோரி வி.சி.க சார்பில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி மரக்காணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான (MGNREGS) நிதியைக் குறைத்ததைக் கண்டித்தும், திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கக்கோரியும் வி.சி.க சார்பில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி மரக்காணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு ஏற்படும் பயன்கள் மற்றும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்கான சதித்திட்டங்கள் குறித்து விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நூறு நாள் வேலைத் திட்டம்: கிராமப்புற மக்களின் உயிர் ஆதாரம்
இந்தியாவில் விவசாய வேலை இல்லாத காலங்களில் நிலமற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், 2005-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு, 2006-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மோடி அரசின் துரோகம்: நிதி குறைப்பு
விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தனது அறிக்கையில், "நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மோடி அரசு குறைத்ததால், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் கடுமையான பொருளாதாரப் பாதிப்பை சந்தித்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பாதித் தொகையைக் கூட இந்த ஆண்டு ஒதுக்கவில்லை. இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 5.12 லட்சம் தொழிலாளர்களில் ஒருவருக்குக் கூட இதுவரை 100 நாள் வேலை முழுமையாகக் கிடைக்கவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தின் நிலை
2024-25 நிதியாண்டில், விழுப்புரம் மாவட்டத்தில் 1.78 கோடி மனித சக்தி நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டது. இதன் மூலம், கிராமப்புற மக்கள் சுமார் ரூ.600 கோடி ஊதியமாகப் பெற்றனர். ஆனால், இந்த ஆண்டு மத்திய அரசு தமிழகத்துக்கு வெறும் 12 கோடி மனித சக்தி நாட்களை மட்டுமே ஒதுக்கியுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 81 லட்சம் வேலை நாட்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு ரூ.272 கோடி மட்டுமே ஊதியமாக கிடைக்கும். இது கடந்த ஆண்டின் வருமானத்தில் பாதிகூட இல்லை. இந்த நிதி குறைப்பு, கிராமப்புறக் குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சமூகத்தினர் அதிகம் பயனடைகிறார்கள் என்பதால், இந்தத் திட்டத்தை மத்திய அரசு சதி செய்து நிறுத்துகிறது" என்று ரவிக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர்த் திட்டம்
"விழுப்புரம் மாவட்டத்தின் குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்க, திமுக அரசு ரூ.3310 கோடியில் திருவண்ணாமலை கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இருப்பினும், 'நிதி இல்லை' என்று கூறி ஒன்றிய பாஜக அரசு அந்தத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்துக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்" என்றும் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இந்த இரு கோரிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட விசிக, மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் மூலம் வலியுறுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.