/indian-express-tamil/media/media_files/2025/03/31/5PICNO0y9PbMmkZHfYS6.jpg)
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரம. செல்வம். இவர் வி.சி.க மேற்கு மாவட்ட பொருளாளராகவும் பதவி வகித்து வந்த நிலையில், இவருக்குச் சொந்தமான விளைநிலத்தில் ஷெட் அமைத்து கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டு வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு இன்று (31.03.2025) அதிகாலை ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் ராமநத்தம் போலீசார் அந்த இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அந்த ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ளநோட்டுகள், கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம், வாக்கி டாக்கி மற்றும் ஏர்கன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. வி.சி.க. நிர்வாகி தனது விளைநிலத்தில் ஷெட் அமைத்து கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த செய்திகள் வெளியான நிலையில் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், வி.சி.க நிர்வாகி விளைநிலத்தில் ஷெட் அமைத்து கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வி.சி.க மேற்கு மாவட்ட பொருளாளர் பரம செல்வம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும், பரம. செல்வத்தைக் கட்சியில் இருந்து நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் வீர திராவிட மணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வி.சி.க கடலூர் மாவட்டச் செயலாளர் வீர திராவிட மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வரும் கடலூர் மேற்கு மாவட்டத்தின் மாவட்ட பொருளாளராகப் பணி செய்து வந்த அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரம. செல்வம் என்பவரை கட்சியின் மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்து விடுக்கப்படுகிறார். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும் அவருடன் கட்சியினர் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுவோர் மீதும் நடவடிக்கை தொடரும் என்பதை இதன் மூலம் உறுதிப்படத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.