VCK celebrates Ayothidasar Birth anniversary: தமிழ் சிந்தனை மரபை வளர்தெடுத்த மாபெரும் ஆளுமையான அயோத்திதாச பண்டிதரின் 177வது பிறந்த நாள் விழாவை விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறப்பாக கொண்டாடியது.
தமிழகத்தில் சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம் உள்ளிட்டவற்றிற்காக போராடிய ஒருவரான அயோத்திதாச பண்டிதர், பத்திரிக்கை கல்வியாளர், சமூக சிந்தனையாளர், மதச் சீர்திருத்தவாதி, அரசியல் சிந்தனையாளர், பத்திரிகை ஆசிரியர், மருத்துவர் என இப்படி பன்முகம் கொண்டவர்.
இத்தகைய அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது விசிக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் நீண்டநாள் கோரிக்கை. இந்தநிலையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தில் 110 விதியின்கீழ், அயோத்திதாசப் பண்டிதரின் அறிவை வணங்கும் விதமாக வடசென்னை பகுதியில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை விசிகவினர் சட்டமன்றத்தில் வரவேற்றனர். கண்ணீரோடு நன்றி தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன், "கலைஞரின் மறைவின் போது அவரது உடல் எடுத்துச் செல்லும் போது என்னையறியாமல் நான் அழுதேன். திருமா என்னை ஆற்று படுத்தினார். தமிழ் சமூகத்திற்கு கலைஞர் ஆற்றிய பணி அவ்வளவு. அயோத்திதாச பண்டிதரின் ஒரு பைசா தமிழன் நாளிதழின் நூற்றாண்டு விழாவையும் கலைஞர் தான் கொண்டாடினார். அயோத்திதாசர் என்ற பேராளுமைக்கு நீங்கள் உருவாக்க இருக்கும் மணிமண்டபத்திற்காக இந்தத் தமிழ்ச் சமூகம் இருக்கும் வரை உங்களுக்கு நன்றி சொல்ல கடன் பட்டிருக்கிறோம்" என்று கூறினார்.
இந்தநிலையில், அயோத்திதாசரின் 177 ஆவது பிறந்தநாளை விசிகவினர் வெகுச் சிறப்பாக கொண்டாடினர். தாம்பரம் தேசிய சித்த மருத்துவ கல்லூரியில் உள்ள அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவித்து புகழாரம் சூட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய விசிகவின் பாலவன் பேசியபோது, "திராவிடத் தந்தை பண்டிதமணி அயோத்திதாசர் புரட்சியாளர் அம்பேத்கருக்கும், தந்தை பெரியாருக்கும் முன்னோடி. தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் , பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். பண்டிதர், புலவர், நாவலர், பேச்சாளர், எழுத்தாளர், என பல பரிமாணங்களில் தனித்துவம் கொண்டவர். பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில், முன்னேற்றம் ஆகியவற்றில் புதிய பாதைகளை உருவாக்கியவர்.
இதையும் படியுங்கள்: கீழக்கரை, சின்ன இலந்தை குளம்… பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைவது எங்கே? அதிகாரிகள் ஆய்வு
தமிழ்த் தேசியத்தின் தொடக்கமாகவே அயோத்திதாசர் விளங்குகிறார். தமிழ்ப் பவுத்ததின் தந்தையாக அதன் வாழ்வியல் கூறுகளை தனது ஆய்வின் வழியே எடுத்தியம்புகிறார். பிராமணர்கள் வேதம் தொடர்பான புத்தகங்களை அச்சிட்டார்கள். பிள்ளைமார்கள் சைவசித்தாந்தம் தொடர்பான நூல்களை அச்சடிக்க தொடங்கினார்கள. ஆனால் முதன்முதலில் ஆரியத்திற்கு நேர் நேரெதிரான திராவிட கொள்கை கோட்பாடுகளை உள்ளடக்கி ஆதி குடிகளின் விடுதலை கருத்துக்களையும் உள்ளடக்கி பொது செய்திகள் தாங்கி ஒரு பைசா தமிழன் வெளிவந்தது. இன்றைக்கு அச்சு ஊடகத்துறையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களும் அல்லது நாடார்களும் அத்தகைய பணிகளை மேற்கொள்வதற்கு முன்பு பண்டிதரே அதனை தொடங்கி வைத்தார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அயோத்திதாசர் தொடங்கிய ஒரு பைசா தமிழன் இதழ் தொடங்கி தற்போது 145 ஆண்டுகள் ஆகிறது. அப்படி பார்த்தால் அவரே ஊடகத் தந்தையாவார். பார்ப்பனர்கள் மற்றும் நாடார்கள் பத்திரிக்கை தொடங்குவதற்கு முன்பே அயோத்திதாசர் பண்டிதர் பத்திரிக்கை தொடங்கியுள்ளார். திராவிடர்களுக்கென்று முதன் முதலில் இயக்கம் தோற்றுவித்தவரும் அவரே. ஒரு பைசா தமிழனை கொண்டாடுவோம்,” என்று பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.