விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குறித்து, திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசியதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து, திருச்சி வி.சி.க மேற்கு மாநகர மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் தலைமையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் என்.காமினியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதில், "எம்.ஜி.ஆர் டிவி என்ற சமூக வலைதளத்தில் திருச்சி சிவா எம்.பி. மகனும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவருமான திருச்சி சூர்யா, வி.சி.க தலைவர் திருமாவளன் குறித்து ஆபாசமாக, அருவருக்கதக்க வார்த்தைகளில் நேர்காணல் கொடுத்துள்ளார். அவரது சாதியை பற்றி இழிவாகவும் பேசியுள்ளார்.
மேலும், அந்த நேர்காணலில் சாதி கலவரத்தைத் தூண்டும் வகையில் தான் சார்ந்த கட்சிக்காரர்களை கொண்டு வெட்டுவோம், குத்துவோம் என்றும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள தயார் என்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நேர்காணல் அளித்துள்ளார்.
மேலும், எங்கள் கட்சியின் தலைவர் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதனை நன்கு அறிந்துகொண்டு சாதிய உள்நோக்கோடு தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்.
தொடர்ச்சியாக இதுபோன்ற பதிவுகளை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்து எங்கள் கட்சியினருக்கும் மற்றவர்களுக்கும் பகைமை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திருச்சி சூர்யா பேசியுள்ளார்.
எனவே, திருச்சி சூர்யா மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவை காவல் ஆணையரிடம், திருச்சி - கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் கனியமுதன், முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், குரு அன்புச்செல்வன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேரில் சென்று அளித்தனர்.
செய்து - க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“