திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி 2009, 2014, 2019, என தொடர்ந்து 3 மக்களவைத் தேர்தல்களில் தி.மு.க கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த நிலையில், 4-வது முறையாக தி.மு.க கூட்டணியில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்கிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் வி.சி.க தி.மு.க கூட்டணியில், 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதற்கு முன், இதே போல, வி.சி.க கடந்த 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி சுவாமிதுரையும் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் வி.சி.க சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் மட்டும் வெற்றி பெற்றார். சுவாமிதுரை 2,797 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தோல்விக்கு, வி.சி.க தனி சின்னத்தில் போட்டியிட்டதே காரணம் என்று கூறப்பட்டது.
அதற்கு அடுத்து, 2014 தேர்தலில் வி.சி.க தி.மு.க கூட்டணியில், தனிச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற வி.சி.க சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டது.
2019-ல் விழுப்புரம் தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் தி.மு.க-வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர். இதில், திருமாவளவன் 3,219 வாக்குகள் என மிகக் குறைந்த வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனை விட கூடுதலாக வாக்குகள் பெற்று பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது, திருமாவளவன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு காரணம், அவர் தனிச் சின்னத்தில் போட்டியிட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டது. அதே நேரத்தில், வி.சி.க ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தி.மு.க-வின் சின்னத்திலும் போட்டியிட்டது விமர்சனத்துக்குள்ளனது.
ஆனால், இந்த மக்களவைத் தேர்தல் 2024-ல் வி.சி.க அதே சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் தி.மு.க கூட்டணியில் தனிச் சின்னமாக பானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதனால், பானைச் சின்னத்தைப் போராடி பெற்ற திருமாவளவன், நடப்பு மக்களவைத் தேர்தலில் வி.சி.க-வின் செயல்பாடு எப்படி இருக்கும், சிறுத்தைகள் சந்திக்கும் சவால்கள் என்ன என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.
வி.சி.க தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் அவரை எதிர்த்து, அ.தி.மு.க வேட்பாளர் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரகாசி இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். 2024 மக்களவைத் தேர்தலில், பா.ம.க, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இப்படி, சிதம்பரம் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
2019 தேர்தலில் தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பு அலை தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்த எதிர்ப்பு அலையை இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காகவே, மோடி, ஜே.பி. நட்டா தமிழ்நாட்டுக்கு வந்து ரோடு ஷோ நடத்தி வருகின்றனர்.
திருமாவளவன் தொடர்ந்து, பா.ஜ.க-வையும் இந்துத்துவா அரசியலையும் தாக்கி வருகிறார். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சிதம்பரம் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்தார். பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினி, சிதம்பரம் தொகுதியில் 2 முறை எம்.பி-யாக உள்ள திருமாவளவன் தொகுதிக்கு கொண்டுவந்த ஒரு திட்டத்தைக் கூறினால், 1 கோடி ரூபாய் பரிசு தருவதாக சவால் விட்டுள்ளார்.
இதற்கு, தேர்தல் அறிவிப்பு தொடக்கத்திலேயே, திருமாவளவன் ஊடகங்களில் பதிலளித்தார்.
அதே நேரத்தில், சிதம்பரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கார்த்தியாயினிக்கு பா.ம.க ஆதரவு இருக்கும் என்பது தெரிகிறது. திருமாவளவனுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இடையே ஒரு நல்ல அபிமானம் உருவாகி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. சிதம்பரம் தொகுதி சிட்டிங் எம்.பி-யாக உள்ள திருமாவளவன் இந்த முறையும் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது வாக்காளர்களை யோசிக்க வைக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த சவால்களை எல்லாம் தாண்டி, திருமாவளவன் பொதுத் தலைவர் என்ற அடையாளத்தை நோக்கி நகரும் ஒரு தலித் கட்சி தலைவராக சிதம்பரம் தொகுதியில் ஒரு நட்சத்திர வேட்பாளராகவே உள்ளார். இதனால், சவால்களைக் கடந்து சாதிப்பாரா வி.சி.க தலைவர் திருமாவளவன் என்ற எதிர்பார்ப்பு கேள்வியும் எழுந்துள்ளது.
அதே போல, விழுப்புரம் தொகுதியில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் இந்த முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் சிட்டிங் எம்.பி-யாக உள்ள ரவிக்குமார், 2வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். தனிச் சின்னமாக பானைச் சின்னத்தில் போட்டியிடுவது கைகொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.