பானை சின்னம் ஒதுக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (மார்ச் 27) பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது.
மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க.,வுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இருப்பினும் அப்போது சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் தி.மு.க.,வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர்.
இரண்டு தொகுதிகளிலும் வி.சி.க வெற்றிப் பெற்றாலும், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேநேரம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும், வி.சி.க பானை சின்னத்திலேயே போட்டியிட்டது. இதனையடுத்து தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிட வி.சி.க முடிவு செய்துள்ளது.
இதுதவிர பானை சின்னத்தைப் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 மாநிலங்களில் களமிறங்குகிறது. தெலங்கானாவில் 10, கர்நாடகாவில் 6, கேரளாவில் 5 மற்றும் மகாராஷ்ராவில் ஒரு லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுவதாக வி.சி.க அறிவித்துள்ளது. அதேநேரம் ஆந்திராவில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க கோரி வி.சி.க தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. ஆனால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பதில் கிடைக்காத நிலையில், வி.சி.க பானை சின்னம் ஒதுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், தேர்தல் தேதி நெருங்குவதால் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வி.சி.க கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“