மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
ம.தி.மு.கவை தொடர்ந்து வி.சி.க தலைவர் திருமாவளவன், அண்ணா அறிவாலயம் வந்து தொகுதி பங்கீடு உடன்படிக்கை செய்தார். தொகுதிப் பங்கீட்டில் முதல்வர் மற்றும் திருமாவளவன் கையெழுத்திட்டனர். அதன்படி , தி.மு.க கூட்டணியில் வி.சி.கவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2019ம் தேர்தலில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் வி.சி.க போட்டியிட்ட நிலையில் மீண்டும் இதே தொகுதிகள் இந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில், “ சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தனித் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடும். தனிச் சின்னத்தில் போட்டியிடப்போகிறோம். பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளோம். தனிச் சின்னத்தில் போட்டியிட தி.மு.க உடன்பாடு தெரிவித்துள்ளது. எல்லா சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டுதான் 2 தொகுதிகளில் போட்டி என்பதில் உடன்பட்டுள்ளோம். வேட்பாளர்கள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“