நாட்டில் மொழிக்கு, மக்களுக்கு, பன்மைத்துவத்திற்கு, சிறுபான்மையினருக்கு என எவருக்கும் பாதுகாப்பில்லை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பில்லை என்று, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில், வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்ச் 1-ந் தேதி தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதற்காக இன்றில் இருந்தே தி,மு.க.வினர் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.
மேலும் வி.சி.க தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட பல கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த பிறந்த நாள் விழாவில் பேசிய எம்.பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன் பேசுகையில், நாட்டில் மொழிக்கு, மக்களுக்கு, பன்மைத்துவத்திற்கு, சிறுபான்மையினருக்கு என எவருக்கும் பாதுகாப்பில்லை, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே பாதுகாப்பில்லை.
இந்த மண்ணையும், மக்களையும் பாதுகாக்கும் அரணாக முதல்வர் விளங்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் ஆற்றல் வாய்ந்த தலைவராக விளங்குகிறார். அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும். மீண்டும் இந்த மண்ணில் உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அப்போதுதான் பெரியாரின் கருத்தியலையும், அம்பேத்கரின் சிந்தனைகளையும் பாதுகாக்க முடியும். உழைக்கும் மக்களின் கனவை நனவாக்க முடியும். ஒட்டுமொத்த தேசத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். உங்களோடு எப்போதும் உற்ற துணையாக இருப்போம் என்று கூறியுள்ளார்.