Advertisment

மத்தியில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் நடந்தால் தவறில்லை - திருச்சியில் திருமாவளவன் பேட்டி

மத்தியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் அதுபோல நடப்பதில் தவறில்லை. இது யாருக்கும் எதிராகவும் மிரட்டுவதற்காகவும் எழுப்பக்கூடிய கருத்து அல்ல. ஜனநாயக ரீதியான கோரிக்கை – திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி

author-image
WebDesk
New Update
Thirumavalavan Trichy airport

மத்தியில் கூட்டணி ஆட்சி நடப்பது போல் தமிழகத்திலும் நடப்பது தவறில்லை. மது ஒழிப்பு மாநாடு தேர்தல் அரசியல் என்று திசை திருப்ப முயற்சி நடக்கிறது என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; 

”வி.சி.க நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தேர்தல் அரசியலுடன் தொடர்புடையது அல்ல. சமூகப் பொறுப்பை உணர்ந்து முன்னெடுக்கப்படும் மாநாடு. இந்திய அளவில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கைம்பெண்களாக துன்பத்தில் உழன்று வருகின்றனர். இந்தியாவில் மது உள்ளிட்ட போதை பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை கணக்கிலிட முடியாத அளவுக்கு உள்ளது.

தமிழகத்திலும் அந்த எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது. கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் சென்றபோது, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் கோரிக்கையாகவும் இருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினை குறித்து பேசுவதற்கு பதிலாக தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் என்று இந்தப் பிரச்சினையை திசை திருப்புகிறார்கள், திரித்து பேசுகிறார்கள். இது வேதனையை அளிக்கிறது.

தி.மு.க கூட்டணியில் வி.சி.க தொடர்கிறது. ஆனால், சமூக பொறுப்புள்ள அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம், அ.தி.மு.க.,வும் பங்கேற்கலாம் என நான் விடுத்த அறைகூவலை, எல்லோரும் சேர்ந்து ஒருமித்த குரலை கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்பதற்கு பதிலாக திருமாவளவன் ஏன் அ.தி.மு.க.,விற்கு அழைப்பு விடுத்தார் என்று இதை திசை திருப்புவது பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தை அவமதிப்பது போல் ஆகும்.

எல்லோரும் ஒருமித்து குரல் கொடுக்கும் போது, ஆளும் தி.மு.க.,வும் அதே கருத்தில் இருப்பதால், அரசு மதுபானக் கடைகளை மூடுவதில் சிக்கல் இருக்காது. காவேரி நதிநீர் பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை போல மது, போதைப் பொருள் ஒழிப்பிலும் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

மது, போதை பொருள் ஒழிப்பில் தேசிய அளவில் கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்பதற்காக தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றேன். தி.மு.க உட்பட அனைவரும் அழுத்தம் கொடுத்தால் தேசிய அளவில் மது மற்றும் போதை ஒழிப்பு கொள்கை உருவாக்க முடியும். இதில் மத்திய அரசுக்கு பொறுப்பு இல்லை; மாநில அரசுகளுக்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கிறது என்பது போல ஒரு பார்வை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 2, 3-வது ஐந்தாண்டு காலத்திட்டத்தில் இது குறித்து பேசப்பட்டுள்ளது. அப்போது, ஸ்ரீமன் நாராயணன் தலைமையிலான குழு மதுவிலக்கு தொடர்பாக 1951-ம் ஆண்டுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதில் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். தேர்தல் அரசியலை அவரவர் வசதிக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம். வெறும் அரசியல் கணக்கை போட்டு பார்ப்பது இந்த பிரச்சினையின் தீவரத்தை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது. ஆகவே அனைவரும் சேர்ந்து போதையில்லா ஒரு தேசத்தை உருவாக்க முயற்சிப்போம்.

போதைப் பொருள் கடத்தலில் மாபியா கும்பல் தேசிய அளவில் தீவிரமாக செயல்படுகிறது. அயல்நாடு மற்றும் உள்நாடுகளில் மாநிலம் விட்டு மாநிலம் போதைப் பொருள் அதிகளவு கடத்தப்படுகிறது. எளிய, விளிம்பு நிலை மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் பரவலாக இன்று பழக்கத்தில் உள்ளது. இவையெல்லாம் தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது. தேசிய அளவில் மனித வள இழப்பு ஏற்படுகிறது.

எனவே, தயவு செய்து இந்த அடிப்படையில் இந்தப் பிரச்சினையை பாருங்கள். அரசியல் அடிப்படையில் பார்த்து இந்த பிரச்சனையில் தீவிரத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டாம். எல்.கே.ஜி படித்த எங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும்.

மது ஒழிப்பு குறித்து வி.சி.க.,வை பா.ம.க விமர்சிக்கவில்லை வரவேற்க தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பா.ம.க குறித்து நான் சொல்லிய கருத்துகளை அவர் கண்டித்துள்ளார். ஆனால் அப்படிச் சொல்ல வைத்தது அவர்கள்தான். நான் முதன் முதலில் சிதம்பரத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபட்டபோது மிகப்பெரிய வன்முறை நடந்ததற்கு பா.ம.க தான் காரணம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு, தமிழர் நலனுக்காக எனது தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில், பா.ம.க தலைவர் ராமதாஸ் உடன் இணைந்து பயணித்தோம். அதன் பிறகு பா.ம.க எடுத்த நிலைப்பாடு, தலித் வெறுப்பு என்பதாக அமைந்துவிட்டது.

வி.சி.க-வுக்கும், எனக்கும் எதிராக அபாண்டமான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டது. தேசிய அளவில் பா.ஜ.க சிறுபான்மை வெறுப்பை ஏற்படுத்தியது போல, தமிழகத்தில் சிறுபான்மை அரசியலை பேச முடியாது என்பதால் தலித், தலித் அல்லாதவர் என்று பிரித்து வெறுப்பு அரசியலை விதைத்தது பா.ம.க தான்.

தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கியதில் இருந்து நான் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வலியுறுத்தி உள்ளேன். இதை மறைந்த த.மா.கா தலைவர் மூப்பனார், வரவேற்று உள்ளார். அதை மேற்கோள் காட்டி மறைமலைநகர் கூட்டத்தில் நான் பேசிய வீடியோ தான் எனது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதில் பதிவிடக்கூடிய வார்த்தைகளில் சில பிழைகள் இருந்ததால் நீக்கப்பட்டு, அந்த பிழை சரி செய்யப்பட்டு மீண்டும் அது பதிவிடப்பட்டது. அது பழைய வீடியோ அல்ல புதிய வீடியோ தான்.

1975 இல் இருந்து மத்தியில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் அதுபோல நடப்பதில் தவறில்லை. இது யாருக்கும் எதிராகவும் மிரட்டுவதற்காகவும் எழுப்பக்கூடிய கருத்து அல்ல. ஜனநாயக ரீதியான கோரிக்கை. ஓர் இடத்தில் அதிகாரத்தை குவிப்பது ஜனநாயகம் அல்ல. அதிகாரம் என்பது அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது. வி.சி.க திட்டமிட்டு ஒரு காயையும் நகர்த்தவில்லை. கடைசி மக்களுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்பதுதான் எனது நிலைப்பாடு. 2026 தேர்தல் வரும்போது இந்த கோரிக்கை தி.மு.க கூட்டணியில் முன்வைக்கப்படுவது குறித்து பதில் சொல்கிறேன்,” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Thirumavalavan Trichy Vck
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment