/indian-express-tamil/media/media_files/2025/06/09/XXRFBhiy1Boza0rRGOmu.jpg)
அதிமுக கூட்டணி ஆட்சிக்கு உடன்படாது: திருமாவளவன் திட்டவட்டம்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற கூட்டணி ஆட்சிக்கு அ.தி.மு.க. ஒப்புக்கொள்ளாது என்றும், வலதுசாரிகளால் தி.மு.க.வுடன் இணைய முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறை செய்திக்கு பேட்டி அளித்த அவர், தி.மு.க. கூட்டணி என்பது, இடதுசாரி சிந்தனைகள் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி இருக்கிற கூட்டணி. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மதச்சார்பின்மை என்கிற கருத்துகளில் உடன்பாடு உள்ளவர்களால் மட்டும்தான் இணைய முடியும். மதச்சார்பின்மையை, முன்னிறுத்துகிற அரசியல் கூட்டணி, இந்தியாவிலே தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் என்பதை அடித்து சொல்ல முடியும்.
அந்தக் கூட்டணியில் அந்தக் கருத்துள்ள வேறு சில கட்சிகள் வருமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் முதல்வர் இருக்கிறார். நான் அதிலே கருத்து சொல்ல முடியாது. ஆனால், வலதுசாரிகளால் திமுகவுடன் இணைய முடியாது. தி.மு.க.வுக்கு எதிராகவும் அவர்களால் ஒன்றிணைய முடியாது. தமிழ்நாட்டில் அதுதான் சிறப்பு. இங்கே திமுகவை எதிர்க்கிற கட்சிகள் பல உள்ளன. ஆனால், அவர்களால் மனமுவந்து ஒற்றுமையாக ஒருங்கிணைந்து திமுகவை வீழ்த்த முடியாது. அவர்களால் ஒரு கூட்டணியையும் உருவாக்க முடியாது. இதுதான் எதார்த்தம்.
கூட்டணி ஆட்சி என்ற சூழலுக்கு அதிமுகவே உடன்படாது; அமைச்சர் பதவி தருவோம் என ஆசைகாட்ட பார்க்கிறார்கள் - திருமாவளவன்#Thirumavalavan | #VCKpic.twitter.com/J3i2JN1k9l
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) June 9, 2025
எனவே இப்போதைக்கு 2026 சட்டமன்ற பொது தேர்தலை பொருத்தவரையில் திமுக தலைமையிலான கூட்டணி மட்டும்தான் இருக்கிறது. இன்னும் எதிர் கூட்டணி உருவாகவில்லை என்று தெரிவித்தார். அப்போது அவரிடம் தே.மு.தி.க கூட்டணி ஆட்சிதான் சாத்தியம் என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த தேர்தலில் அப்படி ஒரு சூழல் இல்லை என்பது என்னுடைய கணிப்பு. அதிமுகவே அதற்கு உடன்படாது என்பதுதான் என்னுடைய நம்பிக்கை.பாஜக உடன் அவர்கள் சேர்ந்தாலும் கூட இதர பல கட்சிகளை அவர்கள் சேர்த்துக்கொண்டு ஒரு கூட்டணி உருவாக்கினால் கூட, அதிமுக இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கு உடன்படாது.
ஒன்னு ரெண்டு பேர் அப்படி மேலோட்டமாக சொல்லலாமே தவிர, அது ஒரு கட்சி முடிவாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அதை ஒரு தூண்டிலாக போட்டு பார்க்கிறார்கள். கூட்டணி ஆட்சி இங்கே அமையும், உங்களுக்கெல்லாம் அமைச்சர் பதவிகள் தருவோம், என்று ஆசை காட்ட பார்க்கிறார்கள். அந்த ஆசைக்கு மயங்கி வெளியே நிற்கிற ஒரு சில கட்சிகளாவது அதிமுக, பாஜக கூட்டணிக்கு வரமாட்டார்களா என்கிற ஏக்கத்தில் இருந்து அவர்கள் முன்வைக்கக்கூடிய ஒரு ஏமாற்று அரசியல்தான் இது என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.