அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் திருச்சி வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க சேர்ந்து என்.டி.ஏ கூட்டணியாக உள்ளன. அ.தி.மு.க கூட்டணிக்கு தனியாக பெயர் வைத்துள்ளதா என தெரியவில்லை. பா.ம.க, தே.மு.திக ஆகிய கட்சிகள் இடம் பெற்றதாக தெரியவில்லை. எனவே கூட்டணி பற்றி கவலையில்லை. பா.ம.க தி.மு.க கூட்டணி வந்தால் வி.சி.க தி.மு.க-வில் இருக்குமா என்பது மீண்டும் மீண்டும் கேட்கப்படும் கேள்வி. அப்படி ஒரு நிலை வந்தால் பார்க்கலாம். அதேநேரம் பா.ஜ.க, பா.ம.க இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம். அ.தி.மு.க எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எண்ணிக்கை பற்றி எந்த பிரச்சினை வந்ததில்லை.
திரை உலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியான ஒன்று. போதைப்பழக்கத்திற்கு திரைத்துறையை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியான விஷயம். தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும், போதை பொருட்கள் தடுக்கப்பட வேண்டும். இதற்கு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும், தனி உளவு பிரிவை இருந்தாலும், தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். தமிழக இளைஞர்களே காப்பாற்ற வேண்டும், இதில் தி.மு.க-வுக்கு என்ன சிக்கல் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பெரியார், அண்ணாவை பற்றி இழிவாக சிறுமைப்படுத்தும் அவமதிக்கும் வகையில் வீடியோ ஒளிபரப்பப்பட்டது எதற்கு என அவர்கள் தான் சொல்ல வேண்டும். முருகன் பக்தர்கள் மாநாடு மோடி பக்தர்களின் மாநாடாகத்தான் நடைபெற்றது.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, திருச்சி, கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், சக்தி ஆற்றலரசு, வழக்கறிஞர் கலைச்செல்வன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கிட்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.