Advertisment

ஆதவ் அர்ஜூனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது; திருச்சியில் திருமாவளவன் பேட்டி

ஆதவ் அர்ஜூனா மீண்டும் வி.சி.க.,வில் இயங்க வேண்டுமென நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார்; திருச்சியில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பேட்டி

author-image
WebDesk
New Update
Thirumavalavan

ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது. அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு என வி.சி.க தலைவர் திருமாவளவன் திருச்சியில் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது திருமாவளவன் கூறியதாவது; ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் எங்களைப் பற்றி கருத்து கூறுவதே தவறு. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என எனக்கு யாரும் அழுத்தம் தரவில்லை. எந்த அழுத்தத்தாலும் என்னை இணங்க வைக்க முடியாது, அது நான் சுதந்திரமாக எடுத்த முடிவுதான்.

கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கிறார். அவருக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது. ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் வெறும் கண் துடைப்பு கிடையாது. ஆதவ் அர்ஜூனா சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லுவதே தவறு. அப்படி சொல்ல கூடாது. அவர் மீண்டும் வி.சி.க.,வில் இயங்க வேண்டுமென நினைத்து இருந்தால் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்திருப்பார். 

Advertisment
Advertisement

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அந்த வகையில், மழை, வெள்ள நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 வழங்கிட வேண்டும். கால்நடைகள், பொருள் சேதம் கணக்கீடு நடத்தப்பட்டு அவற்றுக்கேற்ப நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். 

மத்திய அரசு 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர தான். ஒரு கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும். மாநிலங்களில் மற்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கக் கூடாது என்கிற நிலையில் தான் ஒரே நாடு ஒரே தேர்தலை பா.ஜ.க. அரசு கொண்டுவர பார்க்கிறார்கள்.

அரசமைப்பு சட்டத்தை போற்றிக்கொண்டே, அதைப் புகழ்ந்து கொண்டே, அரசமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பா.ஜ.க அரசு நடத்தி வருகிறது. ஏற்கனவே 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கினார்கள், சி.ஏ.ஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள். இவையெல்லாம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானவை. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க அனைவரும் அணி திரள வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேச முற்பட்டபோது, எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால் அதன் அடிப்படை கூறுகளில் கை வைக்க கூடாது. அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான், தேர்தல் ஆணையம் உள்ளது. இன்று பா.ஜ.க அரசு தேர்தல் ஆணையத்தையே கேள்விக்குள்ளாக்கி அதன் அதிகாரத்தையே பறிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். பகுதி பகுதியாக தேர்தல் நடத்துவதே தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்படும் சுமை. பொருளாதார விரயத்தையும், நேர விரயத்தையும் கட்டுப்படுத்த ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம் என்கிறார்கள். அது அப்பட்டமான பொய்.

அதிபர் ஆட்சி முறையை, ஒரே கட்சி ஆட்சியில் கொண்டு வர வேண்டும், மாநில கட்சிகளே இருக்க கூடாது என்கிற உள்நோக்கத்தில் தான் இதை கொண்டு வருகிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட கூடிய அரசை யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதை உறுதிப்படுத்த பார்க்கிறார்கள். தற்பொழுது உள்ள ஜனநாயகம், எந்த நேரத்திலும் கேள்வி எழுப்பலாம், எப்பொழுது வேண்டுமானாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தால் கூட்டணி கட்சிகளின் தயவே இல்லாமல் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படியொரு நிலையைதான் கொண்டுவர பார்க்கிறார்கள்.இது ஜனநாயகத்திற்கு அரசமைப்பு சட்டத்துக்கும் மிகவும் ஆபத்தானது என தொல்.திருமாவளவன் பேசினார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vck Trichy Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment