பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் பின்னணியில் சங்பரிவார் அமைப்பினர் இருப்பதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய திருமாவளவன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் தவறானது. ஆளுநரின் இந்த மக்கள் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த 13 ஆம் தேதி மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இன்று சிறப்பு கூட்டத்தொடர் ஒரு நாள் அமர்வாக நடந்தேறி தமிழக முதல்வர் மீண்டும் இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியுள்ளார்.
கடைந்தெடுத்த சனாதன பேர்வழியாக உள்ளார் ஆளுநர். தி.மு.க.,விற்கு எதிராக உள்ளதுடன் பெரியார், அம்பேத்கரை எதிரிகளாக பார்க்கிறார். அந்த பெயர்களை அருவருப்பாக பார்க்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய மசோதாக்களை திருப்பி அனுப்பி நெருக்கடிகளை உருவாக்குவதாக எண்ணுகிறார். அதற்கு வன்மையான கண்டனங்களை கூறிக்கொள்கிறோம். அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.
பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற ஆளுநர்கள் மூலம் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆளுநர் ரவி மிக மோசமாக நடந்து கொள்கிறார். ஆளுநர் வெளிப்படையாக ஏன் எதிர்க்கிறார், 10 மசோதாக்களை எதற்காக திருப்பி அனுப்புகிறார் என ராஜ்பவன் ஏன் விளக்கம் அளிக்க கூடாது?
மக்கள் போராடுவது என்பது ஜனநாயகத்தின் வடிவம். திருவண்ணாமலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. அது வன்மையான கண்டனத்திற்கு உரியது. ஆறு பேர் மீதான வழக்கு திரும்ப பெற்ற நிலையில் இன்னொரு நபர் மீதான வழக்கும் திரும்ப பெறப்பட வேண்டும். மேலும் இத்தகைய போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்பது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலைபாடு.
பா.ஜ.க ஆட்சி வந்த பிறகு தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. அனைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களிலும் சங் பரிவார் அமைப்பினர் பின்னனியில் இருக்கின்றனர். மற்ற அமைப்பினர் யாரும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதில்லை.
இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்தியா கூட்டணியில் தொடரும், தேர்தலில் பங்கேற்கும். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.