அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், வேறு சில நபர்களும் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் இதுதொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளோம்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும்கூட, அந்தக் குற்றச் செயல் அதிர்ச்சியையும் வேதனையும் உருவாக்கியுள்ளது. கல்வி வளாக விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளுக்குத் தேவையான பாதுகாப்பை அளிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி, ஒரு சிலர் குற்றத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. ஆகவே தமிழக அரசு குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பிணை வழங்கக் கூடாது.
விசாரணையை விரைவில் முடித்து குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். 'யார் அந்த சார்?' என்கிற சந்தேகத்தில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்.
இந்த விவகாரத்தில் 'யார் அந்த சார்?' என்று பாஜக, அதிமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில், திருமாவளவனும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.